புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆடுகளைத் திருடி வந்த ஐந்து பேர் ஆடுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் வளர்த்து வந்த ஆடுகள் தொடர்ந்து திருடு போவதாக மாவட்ட காவல்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதற்கு முடிவுகட்ட காவலர்கள் தீவிர இரவு ரோந்துப் பணி மேற்கொண்டு குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி அறிவுறுத்தல் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் இரவு மற்றும் பகல் நேரங்களில் தீவிர சோதனைகளில் ஈடுபட்ட வந்தனர். நேற்று இரவு ரோந்துப்பணி மேற்கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் ஆடுகள் இருந்தது தெரிய வந்தது.
காரில் இருந்தவர்களிடம் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் அப்பகுதியில் தொடர்ந்து ஆடுகளை திருடி வருவது தெரியவந்தது. அதனையடுத்து தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட முள்ளிக்காப்பட்டியை சேர்ந்த ஐயப்பன்(38), குமார்(35), ராமராசு(32), கல்லாக்கோட்டையைச் சேர்ந்த முருகேசன்(45), கண்டினிவயலைச் சேர்ந்த ஜோதி(21) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 46 ஆடுகளையும், இரண்டு கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ராயல் ஹமீது.