தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலையின் பணிகள் இருபுறமும் முடிவடையும் வரை கனரக வாகனங்கள் செல்ல மாற்று பாதையை ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகரத்தில் தற்போது மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு 1000 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் 2018-2022 என நான்காண்டுகளுக்கு மேலாக மிகவும் மந்தமான கதியில் நடைபெற்று வருகிறது. விரைந்து முடிக்காத காரணத்தினால் தூத்துக்குடி மாநகரத்தில் வசிக்கக்கூடிய பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மழைக்காலங்களில் இது கூடுதல் சிரமத்தை உண்டு பண்ணுவதோடு, அடிக்கடி விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. இந்நிலையில் சிதம்பர நகர் மற்றும் பிரையண்ட்நகர் சாலைகளில் நடைபெற்று வரும் பணிகளால், ஒரே பாதையில் கனரக வாகனங்கள், மினி பஸ் உள்ளிட்டவை வந்து செல்வதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அந்த சாலையின் பணிகள் இருபுறமும் முடிவடையும் வரை அந்த சாலையில் இருசக்கர மற்றும் சிறிய ரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும்.
மினி பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வந்து செல்ல மாற்று பாதையை ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் தெற்கு காவல் நிலையத்திலிருந்து திருச்செந்தூர் நோக்கி செல்லும் சாலையின் நடுவே போடப்பட்டுள்ள டிவைடர் தரமானதாக போடப்படாததால் அடிக்கடி இடிந்து விழுகிறது. இதில் நீட்டிக் கொண்டு நிற்கும் கம்பிகளால் விபத்து ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே அந்த சாலையை முறையாக ஆய்வு செய்து தரமான டிவைடர் போட வேண்டும். அதே சாலையில் நடுவே போடப்பட்டுள்ள Junction Hole கீழே இறங்கி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை உண்டு பண்ணுகிறது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள செவிலியர், மாணவிகளின் விடுதி அருகே 15 நாட்களுக்கு மேலாக இந்த பிரச்சனை இருந்து வருகிறது. எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுகளின் நலன் கருதி உடனடியாக இப்பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வேல்முருகன் தூத்துக்குடி.