கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியைப் பார்க்க 50 ஜிபி டேட்டா அனைத்து நெட்வொர்க்குகளிலும் இலவசம் என்ற குறுந்தகவல்களால் அனைவரது செல்போன்களும் நிரம்பி வழிகின்றன. அதைப்பற்றிய உண்மையை ஆராயாமல் 50 ஜிபி டேட்டாவுக்கு ஆசைப்பட்டு அனைவரும் அதை தங்கள் செல்போனில் உள்ள மற்ற எண்களுக்கு ஃபார்வர்ட் செய்து வருகிறார்கள்.
கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி குறித்த தகவல்கள் அனைவராலும் படிக்கப்படுகிறது. ரசிகர்கள் வீடியோக்களை திரும்பிப் பார்க்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி இப்படி ஒரு ஏமாற்றும் குறுந்தகவல் பரவி வருகிறது.
அதில், ‘FIFA உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு 2022 கார்டெல் உலகக் கோப்பையைப் பார்க்க 50 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. நான் என்னுடையதைப் பெற்றேன். இதைத் திறக்கவும் 50 GB இலவசம்’ என்று ஒரு பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
இந்த லிங்கைத் திறந்து உள்ளே போனால், உடனடியாக இந்தத் தகவலை நீங்க 21 வாட்ஸ் அப் குரூப்புக்கு ஷேர் செய்யவும் என வரும். உடனடியாக அதை 21 வாட்ஸ் அப் குரூப்புகளுக்கு ஷேர் செய்தாலும் அதனால் எந்த பயனும் இருக்காது. அதை மறந்து விட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், அவர்கள் ஷேர் செய்த குரூப்புகளில் உள்ளவர்கள் அந்தத் தகவலை படித்துவிட்டு அதை தங்கள் இடம் பெறும் மற்ற 21 குரூப்புகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். இப்படியே தொடர் சங்கிலியாக இது பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் யாருக்கும் எந்த நெட்வொர்க்கில் இருந்தும் இலவச டேட்டாக்கள் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது போன்ற பொய்யான செய்திகளால் உங்கள் தகவல் திருடப்படலாம் என்பது ஆதாரப்பூர்வமான உண்மை. மேலும், இதுபோன்ற மெசேஜில் உள்ள லிங்க்கை கிளிக் செய்தால் நீங்கள் மோசடி செய்யப்பட அதிக வாய்ப்புபிருப்பதாக இந்திய அரசின் இணைய பாதுகாப்புக் குழு எச்சரித்துள்ளது. மெசேஜை கிளிக் செய்து உங்கள் தனிப்பட்ட தகவலை தந்தால் உங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும் காலியாக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே, இந்த மோசடியில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மக்களே, உங்களுக்கு 50 ஜிபி டேட்டாவும் வேண்டாம். உள்ளதை இழக்கவும் வேண்டாம்.
அப்படி வரும் மெசேஜ்களை புறக்கணித்துவிடுவது உத்தமம்!
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– பாரூக், சிவகங்கை.