தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37,459 அரசுப்பள்ளிகளும், 8,357 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். சமீபகாலமாக ஆசிரியர்கள் மாணவர்களிடையே உறவு சற்று தடுமாற்றத்துடன் செல்கிறது. மாணவர்கள் மற்றும் அந்நியர்களால் ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதால், மருத்துவர்களைப்போல ஆசிரியர்களுக்கும் பணிப்பாதுகாப்புக்கு தமிழகஅரசு உத்தரவிடவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது, ‘தமிழ்நாட்டில் பொருளாதரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் கல்வி அறிவு பெறுவதில் அரசுபள்ளிகள் முக்கிய அங்கம் வகிக்கிறது. சமீபகாலமாக பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் சில சமூகவிரோதிகளால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆசிரியர்களை பள்ளிவளாகத்திற்குள்ளே சென்று தாக்கிய சம்பவங்களும் சில இடங்களில் அரங்கேறியுள்ளன. மேலும் சில இடங்களில் நெறிபிறழ் நடத்தையுள்ள மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் மீது வீண் பழிசுமத்தப்படுவதும், அதனால் ஆசிரியர்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன. உண்மையிலேயே தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதை வரவேற்கும் அதேநேரத்தில், பொய்யான குற்றச்சாட்டால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
குழந்தைகளோடு நேரடித்தொடர்பு உள்ளதால் பல தேவையற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு ஆசிரியர்கள் ஆளாக நேரிடுகிறது. மாணவர்களின் முன்னேற்றத்திற்காக தன்னலம் கருதாமல் பாடுபடும் ஆசிரியர்கள் சமுதாயத்தில் உயர்வாக மதிக்கப்பட வேண்டியவர்கள். அவ்வாறு மதிக்கப்பட்டநிலை இன்று மாறிவருகிறது. தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளைக் கூட நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் அச்சப்படுகின்றனர்.
ஒரு பக்கம் மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மாணவர்களை தயார்ப்படுத்தகோரும் உயரதிகாரிகளின் நெருக்குதல், மறு பக்கம் மாணவர்களின் ஒத்துழைப்பின்மை என கடுமையான மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் ஆளாக நேருகிறது. ஆசிரியர்கள் – மாணவர்கள் உறவு பாதிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்து, அதைச் சீராக்க, கல்வித்துறை முன் வரவேண்டும். அதே நேரத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் இன்று பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியும் வருகின்றனர்.
படிப்பில் பின் தங்கிய மாணவர்களை கண்டித்ததற்காக ஆசிரியர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறுவதும், சில அரசியல் காரணங்களுக்காகவும் பல்வேறு ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. சில இடங்களில் விசாரணையின்றி ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இதனால் கற்றல் கற்பித்தலில் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு சில இடங்களில் நடக்கும் விரும்பத்தகாத சம்பவங்கள் மற்றும் சச்சரவுகளால் ஆசிரியர்கள் மத்தியில் தேவையற்ற பதற்றம் நிலவிவருகிறது.
இந்நிலைகளை மாற்றுவதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை மையங்களை பள்ளிகளில் நிறுவ வேண்டும். மதிப்பெண் எடுப்பதை முக்கியமாக கருதாமல் சிந்தனைகளை தூண்டும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். மேலும் மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவேண்டும். விளையாடுவதன் மூலம் வகுப்பறை அழுத்தத்திலிருந்து மாணவர்கள் விடுபடமுடிகிறது.
வருங்கால மாணவர் சமுதாயம் அறிவாற்றல் வாய்ந்த, வலிமையான சமுதாயமாக மாற்றுவதற்கான ஒத்துழைப்பை ஆசிரியர்கள் தருவதற்கு கடுமையாக உழைக்கும் அதே நேரத்தில் அவர்கள் அச்சமில்லாமலும், மனநிறைவுடனும் பணியாற்ற ஏதுவாக, மருத்துவர்களுக்கு உள்ளதுபோல் பணிப்பாதுகாப்பு சட்டத்தை தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும்’ என தங்கள் அமைப்பின் சார்பாக கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவித்துள்ளார்.
– பாரூக், சிவகங்கை.