கோவையில் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் மற்றும் ஆண்கள் சமைக்கும் உணவுகளை விற்பனை செய்வதற்காக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வீட்டில் உணவு சமைக்காத நேரத்தில் நாம் ஹோட்டல் உணவுகளை நாடிச்செல்கிறோம். இன்றைய நவீன காலத்தில் பல்வேறு ஹோட்டல் உணவுகளையும் நம் வீடு தேடி வந்து கொடுக்க பல்வேறு செயலிகள் வந்துவிட்டன.
அப்படி வரும் உணவுகள் தரமானதாக உள்ளதா? வீட்டில் சமைத்த உணவு போல் உள்ளதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனிடையே வீட்டில் சமைக்கப்படும் உணவுகளை வாடிக்கையாளர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக புதிதாக ஒரு செயலி தொடங்கப்பட்டுள்ளது.
குக்கர் (COOKR) என்ற இந்த செயலி கோவையை மையமாக வைத்து துவங்கப்பட்டுள்ளது. கோவை புலியகுளம் அடுத்த மீனா எஸ்டேட் பகுதியில் இந்த நிறுவனம் செயல்படத் துவங்கியுள்ளது.
வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் தாங்கள் சமைக்கும் உணவுகளை இந்த செயலி மூலம் விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்குச் செல்லாமல் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொழிலில் இணைய விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளும் போது அவர்கள் உணவின் தரத்தை எங்களது குழுவினர் ஆய்வு செய்வர்.
இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறையில் அவர்களுக்கு உரிமம் பெற்றுக் கொடுக்கிறோம். இதனையடுத்து அவர்கள் உணவுகளை தயாரித்து எங்கள் செயலி மூலம் விற்பனை செய்யலாம். தயாரிக்கும் உணவுகளுக்கான விலையை அவர்களே நிர்ணயிக்கலாம். அவரவருக்கு ஏற்ற நேரத்தில் உணவை சமைத்து விற்பனை செய்யலாம்.
அவர்களுக்கு கிடைக்கும் ஆர்டர்களை எங்களது ‘டெலிவரி பார்ட்னர்களை’ வைத்து எடுத்து, அதனை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறோம். இதற்கான சேவைக்கட்டணத்தை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். தற்போது கோவையில் மட்டும் தொழிலை தொடங்கியுள்ளோம். 75 பேர் வரை இந்த தொழிலில் இணைந்துள்ளனர்.
என்று பிரபா சந்தான கிருஷ்ணன் கூறினார்!!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.