திமுக அரசின் 18 மாத ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, கடை வரி, பால் விலை மற்றும் மின் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் 9ஆம் தேதி பேரூராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும்
சிவகங்கை மாவட்டத்தில் பேரூராட்சி அளவில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிங்கம்புணரி ஒன்றியக்குழு தலைவர் திவ்யாபிரபு தலைமையேற்றார். ஒன்றிய செயலாளர் திருவாசகம், நகர செயலாளர் வாசு முன்னிலை வகித்தனர்.
நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டம், மடிக்கணினி திட்டம், முதியோர்களுக்கான உதவித்தொகை போன்றவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அம்மா உணவகம் மற்றும் மினி கிளினிக் ஆகிய திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, அதனைக் கண்டித்து திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு உரிமைத்தொகையாக ₹.1000 வழங்கப்படாதது, நீட் தேர்வு ரத்து செய்யப்படாதது போன்றவற்றைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிகழ்வில் எஸ்.புதூர் வடக்கு ஒன்றிய செயலாளர், தெற்கு ஒன்றிய செயலாளர், அதிமுக 18 வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், அதிமுக நகர துணை செயலாளரும், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான குணசேகரன் நன்றி உரையாற்றினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.