மேலூரில் 15 இலட்சத்தில் பயணியர் நிழற்குடை! மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அடிக்கல் நாட்டினார்!
மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியில் திருச்சி மற்றும் காரைக்குடி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகளுக்கான நிறுத்தம், பேருந்து நிலையத்திற்கு எதிர்புறத்தில் உள்ளது. இந்த இடத்திற்கருகில் வாடகை ஆட்டோக்கள் மற்றும் மகிழுந்துகள் (கார்கள்) நிறுத்தமும் உள்ளது. அதேபோல பெரிய வணிக வளாகங்களும் இந்த இடத்திற்கு அருகிலேயே இருப்பதால் இந்தப் பேருந்து நிறுத்தம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கும் நோக்கிலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கிலும் இந்த வெளியூர் பேருந்து நிறுத்தத்தை நீதிமன்ற மற்றும் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பாக மாற்றியமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து அமைக்கப்பட உள்ள புதிய பயணிகள் நிழற்குடைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை நகராட்சி நிர்வாகம் அணுகியது.
இதையடுத்து அவர் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ₹.15 இலட்சம் நிதியை ஒதுக்க மகிழ்வுடன் ஒப்புதல் தந்தார். இதைத் தொடர்ந்து இன்று (30/12/2022) காலை 11 மணியளவில் மேலூர் நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடந்த நிகழ்வில் புதிய பயணியர் நிழற்குடைக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டு விழா முடிந்ததும், செய்தியாளர்களைச் சந்தித்த சு.வெ, ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிமுடிக்கும் தேதியை மட்டுமே தொடர்ந்து கூறிக் கொண்டிருப்பதாகவும், துவங்கும் தேதியை இதுவரை அறிவிக்க மறுப்பதாகவும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டத்துவங்கும் தேதியை அறிவிக்குமாறு நாடாளுமன்றத்தில் தாமும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரும் தொடர்ந்து கேட்டும், ஒன்றிய அரசு மௌனத்தை மட்டுமே பரிசளிப்பதாகக் கூறினார். கடைசியாக நடந்த கூட்டத்தொடரில் வரும் 2026ல் மதுரை எய்ம்ஸ் பணியை முடிக்க உள்ளதாகக் கூறியுள்ளனர் எனவும், ஆனால் கடந்த ஆண்டே மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை துவங்கி அவர்கள் இராமநாதபுரம் கல்லூரியிலே பயின்று வருவதையும் சுட்டிக்காட்டி, இந்த உலகிலேயே தாம் படிக்கும் கல்லூரியைப் பார்க்காமலே பட்டம் பெறப் போகும் சாதனையை நமது ஒன்றிய அரசால் மட்டுமே நிகழ்த்த முடியும் எனவும் கூறினார். நிகழ்வில் மேலூர் நகர்மன்றத் தலைவர் முகமது யாசின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலூர் தாலுகா செயலாளர் கண்ணன், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் பொறியாளர் பக்ருதீன் அலி அகமத், மேலூர் ஜமாத் தலைவர் ஹாஜி சேக் தாவூத் ஆகியோர் பங்குகொண்டனர். மேலும் பொதுமக்கள் அதிகளவில் பங்குகொண்ட இந்நிகழ்வில் ஏராளனமான கோரிக்கை மனுக்களையும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் பெற்றுக்கொண்டார்.
– மதுரை வெண்புலி.