ஆன்மீக செய்தி !!! அரசியலில் நீதி தவறாத
ஆட்சியாளர்கள்!!!
இறைத்தூதரின் அன்பு மகள் ஃபாத்திமா. மிக எளிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவர். வீட்டு வேலைகள் அனைத்தையும் அவரே செய்வார். திருகையில் மாவு அரைத்து அரைத்து அவருடைய கைகளில் காய்ப்புக் காய்த்துவிட்டது.
கணவர் அலீ தம் மனைவிபடும் சிரமத்தைக் கண்டு அவரிடம் ஓர் ஆலோசனை கூறினார். உன் தந்தை இறைத்தூதர்தான் இன்று மதீனாவின் ஆட்சியாளராக இருக்கிறார். அரசுக் கருவூலத்திற்கு இன்று நிறைய கைதிகள் கிடைத்துள்ளனர். அவர்களில் யாரேனும் ஒருவரை வீட்டு வேலைகளுக்காகத் தருமாறு சென்று கேள்” என்கிறார்.
ஃபாத்திமாவும் தம் தந்தையிடம் சென்று வீட்டுவேலைகளுக்கு ஒரு பணியாளரைத் தரும்படி கேட்கிறார். ஆட்சியாளரான இறைத்தூதர் என்ன சொன்னார் தெரியுமா?
“அன்பு மகளே…அரசுப் பொறுப்பில் கிடைத்திருக்கும் கைதிகள் அனைவரும் அரசாங்கத்துக்கு உரியவர்கள். பொதுமக்களின் சொத்துகள். பொதுமக்களிடையே பங்கிடப்பட வேண்டியவர்கள். உனக்குத் தருவதற்கு இல்லை மகளே” என்று கூறி மறுத்துவிட்டார்.
அரசுக் கருவூலத்தைச் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது இறைச்சட்டம். இறைச்சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது ஓர் இறைத்தூதரின் கடமை. இதற்குப் பெயர்தான் இறைவழி அரசியல்.
மக்ஸும் கிளை, அரபுகளின் ஓர் உயர்ந்த கோத்திரம். அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள். திருட்டுக் குற்றம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. கோத்திரத் தலைவர்கள் கூடிப் பேசினர். உயர் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் தண்டிக்கப்பட்டால் அது நமது கோத்திரத்துக்கே அவமானம். ஆகவே நபிகளாரிடம் தூது அனுப்பி, அந்தப் பெண்ணுக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதைக் கேட்டதும் நபிகளாரின் முகம் கோபத்தால் சிவந்து விட்டது. அவர் கூறினார்: “என் மகள் ஃபாத்திமாவே திருடியிருந்தாலும் அவரைத் தண்டிக்காமல் விட மாட்டேன்” என்றார்.
“நீதியை நிலைநாட்டுங்கள்” என்பது இறைச்சட்டம். அதை நடைமுறைப்படுத்தினால் அதற்குப் பெயர்தான் இறைவழி அரசியல்.
கலீஃபா உமர் அவர்களின் ஆட்சிக்காலம். பாரசீக, ரோமானியப் பேரரசுகளை எல்லாம் மண்டியிடச் செய்த மாபெரும் ஆட்சியாளர். அவருடைய ஆட்சிக்காலத்தில் அரசுக் கருவூலம் நிரம்பி வழிந்தது. ஆனால் உமர் அவர்களின் சட்டடையில் ஒன்பது ஒட்டுத் துணிகள். அத்துணை எளிமை. ஒருமுறை உமர் அவர்கள் நோய்வாய்ப்பட்டார். மருந்தைக் குழைத்துச் சாப்பிட கொஞ்சம் தேன் தேவைப்பட்டது. ஏழை உமரின் வீட்டில் எப்படித் தேன் இருக்கும்? அரசுக் கருவூல அதிகாரியிடம் சிறிதளவு தேன் தரும்படி அந்த மாபெரும் ஆட்சியாளர் கோரிக்கை வைக்கிறார். அரசுக் கருவூல அதிகாரி தயங்குகிறார். அரசுக்குச் சொந்தமான தேன் ஆயிற்றே…எப்படித் தருவது என்று. அதிகாரி விசாரணை நடத்துகிறார். கலீஃபா உடல்நலமில்லாமல் இருக்கிறார் என்பது உண்மைதான் என்றும் தேன் அவசியம் என்றும் தெரியவருகிறது. அதற்குப் பிறகே மருந்துக் குழைப்பதற்கு எவ்வளவு தேன் தேவையோ அந்த அளவை மட்டும் தருகிறார். அரசுக் கருவூல அதிகாரியின் நேர்மையையும் பொறுப்பு உணர்வையும் கண்டு கலீஃபா பெரிதும் மகிழ்கிறார்.
இதுதான் இறைவழி அரசியல்.
“(நபியே)இறைவன் இறக்கி அருளிய சட்டத்திற்கு ஏற்ப அவர்களுடைய விவகாரங்களில் தீர்ப்பு அளியுங்கள். அவர்களின் ஆசாபாசங்களைப் பின்பற்றாதீர்கள்.” (குர்ஆன் 5:49)!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.