கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
கோரிக்கை!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் பொது மேலாளருக்கு பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் நிறுவனத்தின் பொது மேலாளருக்கு பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருமான பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எனது பாபநாசம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ மாணவிகள் பெரும்பாலும் அரசு பேருந்துகளில் தான் வந்து செல்கின்றனர். பள்ளி,கல்லூரிகள் தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களில் அரசுப் பேருந்துகளில் கடும் கூட்ட நெரிசல் காணப்படுகின்றது. ஒருவருக்கொருவர் நெருக்கியபடி மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பயணிக்கின்றனர். மேலும் இந்த நேரங்களில் அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்லும் பொதுமக்களும் பேருந்துகளில் ஏற முடியாமல் தவிக்கின்றனர்.எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தஞ்சாவூர் கும்பகோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் பேருந்துகள் சிறிய ஊர்களில் நின்று செல்வதில்லை. இந்த பேருந்துகளில் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் பேருந்து நிலையங்களில் பாபநாசம்,அய்யம்பேட்டை உள்ளிட்ட ஊர்களுக்கான பயணிகளை பெரும்பாலும் ஏற்றாமல் தவிர்க்க முயல்கின்றனர்.
இதனால் இந்த பேருந்துகளின் தடத்தில் உள்ள பகுதிகளில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
தஞ்சாவூர் – பாபநாசம் இடையே தடம் எண் 25 மொத்தம் 4பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது அவை 2 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 2 பேருந்துகளையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கும்பகோணம் – திருவையாறு நெடுஞ்சாலையில் பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் வழியாக திருவையாறு நகருக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள தடம் எண் 51 பேருந்து சேவையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பகோணம்- வீரமாங்குடி இடையே இயக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள தடம் எண் 42 பேருந்து சேவையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாபநாசத்தை அடுத்த தேவராயன்பேட்டை கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால், அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி கும்பகோணம் அய்யம்பேட்டை இடையே பாபநாசம், தேவராயன்பேட்டை,வடக்கு மாங்குடி வழியாக பேருந்து சேவையை தொடக்கவேண்டும். கும்பகோணம் திருவையாறு மார்க்கத்தில் சுவாமிமலை, கபிஸ்தலம், கணபதி அக்ரஹாரம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.
தஞ்சாவூர் கோவத்தக்குடி இடையே செல்லும் தடம் எண் 27 பேருந்து சேவையை இந்த மார்க்கத்தில் செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலன் கருதி கோவத்தக்குடியில் இருந்து காலை 8.00 மணிக்கும், மெலட்டூரில் இருந்து கோவத்தக்குடிக்கு மாலை 4.30 மணிக்கும் இயக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-தஞ்சை மைதீன்.