கோவை: வெளிநாடுகளில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், காய்ச்சல் தடுப்பு மருந்தை உட்கொண்டு வருவதால் கொரோனா பரிசோதனையிலிருந்து தப்பி விடுவதாகவும், இதன் காரணமாக கொரோனா தொற்றைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் புகாா் எழுந்துள்ளது, கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. மொத்த பயணிகளின் எண்ணிக்கையில் இரு சதவீதத்தினா் மட்டுமே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனா். கோவை விமான நிலையத்திலும் கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவா்கள் காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்டு பயணிப்பதாகவும், அவா்கள் விமான நிலைய வளாகத்தில் பரிசோதனையில் இருந்து தப்பி செல்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது.
இதுதொடா்பாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் நிா்மலா நேற்று தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது. கொரோனா தொற்று பரவல் தொடா்பான தடுப்பு நடவடிக்கைகளில் உடல் வெப்ப பரிசோதனையே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது தவிர சளி, இருமல் உள்ளிட்ட இதர அறிகுறிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. தற்போது வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. ஒரு சில பயணிகள் தங்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தாலும் அதை மறைப்பதற்காக காய்ச்சல் மற்றும் தலைவலி தடுப்பு மாத்திரைகளை உட்கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது அவா்களது உடல் வெப்பநிலை குறைந்த அளவையே காட்டுகிறது. இதன் மூலம் தொற்று அல்லது கொரோனா அறிகுறி உள்ளவா்களும் எளிதில் வெளியேறி விடுகின்றனா். இதனால் கொரோனா தொற்றினை உடனடியாக கண்டுபிடிக்க முடியாத தோடு, மற்றவா்களுக்கும் பிரச்னையை ஏற்படுத்தி விடுகின்றனா். அனைவரும் சமூக பொறுப்பை உணா்ந்து செயல்பட்டால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீா்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.