கோவை மாநகரில் சாலையோரங்களில் கடைகளுக்காக ஆக்கிரமித் துள்ளவர்கள் அடுத்த 3 நாள்களுக்குள் அவற்றை அகற்றிவிட வேண்டும் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கோவை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகரில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சாலை உபயோகிப்பாளர்கள் செல்ல வேண்டிய இடங்க–ளுக்கு கால விரயமி–ன்றியும், சிரமமின்றியும், பாதுகாப்பாகவும் செல்லும் வகையில் போக்குவரத்தை எளிமைப்படுத்துவது குறித்து கோவை மாநகர காவல் துறை பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சாலையோர மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக கோவை மாநக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் தலைமையிலான போக்குவரத்து பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவு அதிகாரிகள் இணைந்த குழு கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கான காரணங்களையும், அதை சரி செய்வது குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தது.
இதில், மாநகரில் சில இடங்களில் தேநீர் விடுதிகள் மற்றும் சாலையோர கடைகள் நடத்துவோர் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அனுமதிக்கப்பட்டதற்கு மாறாக பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கும், சாலை போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
எனவே, அடுத்த 3 நாள்களுக்குள் சாலையோர கடைகள் மற்றும் தேநீர் விடுதிகள் நடத்துவோர் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமம் மற்றும் அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு மாறாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை காலி செய்து காவல் துறையின் போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கோவை மாநகராட்சியின் மூலம் ஆக்கிரமிப்பை அகற்ற சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.