சிங்கம்புணரி:
தமிழ்ச் சமுதாயம் கொண்டாடும் பொங்கல் விழா ஜாதி, மத, இன வேறுபாடுகள் எதுவுமின்றி உழைப்பையும், உழைப்புக்கு உதவியவர்களையும் எண்ணி நன்றி தெரிவிக்கும் இனிய பண்பாட்டுத் திருவிழாவாக, மனித நேயம் வளர்க்கும் மகத்தான திருவிழாவாக, தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் கொண்டாடப்படுகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறி மக்கள் ஒவ்வொருவரையும் நம்முடன் பிறந்தவராக கருதும் உயரிய சிந்தனையை உலகுக்கு தந்த தமிழினம், மனித சமுதாயத்திற்கே பொதுவான திருவிழாவாகக் கண்டுள்ள தனிப்பெரும் திருநாள் பொங்கல் திருநாள்.
தமிழர்களின் பாராம்பரிய திருநாளான அந்த பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கியுள்ளன.
அதன்படி சிங்கம்புணரி நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (12/01/23) நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கரும்பு, மஞ்சள், வெல்லம், பச்சரிசி போன்றவற்றை வைத்து பொங்கல் இட்டனர். அப்போது தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான ‘கொம்பு’ ஊதி, பறை இசைக்கப்பட்டது.
பொங்கல் பொங்கி வந்தபோது நீதிமன்ற வளாகத்தில் குழுமி இருந்த அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று முழக்கம் எழுப்பினர். பின்பு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிங்கம்புணரி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சாதத்துனிசா தலைமை தாங்க, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பழ.துரைவேலவன், செயலாளர் ராஜேஸ் மற்றும் பொருளாளர் மணிகண்டன், மூத்த வழக்கறிஞர்கள் அறிவுடைநம்பி, முத்துராமன், முத்தையா ஆகியோர் முன்னிலை வகிக்க,
வழக்கறிஞர்கள் ரமேஷ், அப்துல் ஹக்கீம், மணிகண்டன், தினேஷ், சுருதி, சரவணன், திருசக்தி, ராஜூ, செந்தில்குமார், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
One Response
அருமை 👌👌👌👌வாழ்த்துக்கள் 🥰🥰🥰💐💐💐 நல்ல பதிவு 👍👍