கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக 2022-2023 மூன்றாவது காலாண்டிற்கான மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளதாவது:
கோவை மாவட்டத்தில் 1148 உரிமமும், 2691 பதிவுச்சான்றும் வணிக நிறுவனங்கள் பெறப்படாமல் உள்ளது. எனவே உரிமம் பதிவு சான்று பெறாமல் அல்லது புதுப்பிக்காமல் வணிகம் செய்யும் வணிக நிறுவனங்கள் உடனடியாக சான்று பெற வேண்டும். அவ்வாறு பெறாதவர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 6 மாத சிறை தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
நிரந்தர விற்பனைக்கடைகள், ஸ்டால்கள், வண்டிகள் போன்றவற்றின் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர்களுக்காக மாவட்டத்தில் உள்ள 8 உழவர் சந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுந்தராபுரம் மற்றும் வடவள்ளி உழவர்சந்தைகள் கிளின் வெஜிடேபில்ஸ் மற்றும் பிரஸ் ப்ரூட்ஸ் சான்று பெறப்பட்டுள்ளது. மேலும் ஆர். எஸ். புரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் உழவர்சந்தைகள் இந்த சான்று பெற துரித நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
உணவு பாதூகப்பு உரிமம் பெற்றுள்ள அனைத்து உணவு வணிகர்களும் தங்களது வணிகத்தின் வகைக்கு ஏற்ப உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பெற்று சான்றிதழ் பெறுதல் கட்டாயம் ஆகும்.
அனைத்து ஸ்டார் ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள், பேக்கரிகள், ஸ்வீட் ஸ்டால்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் இறைச்சி கடைகள் பாதுகாப்பான முறையில் உணவு வழங்குவது குறித்து ஹைஜின் ரேட்டிங் சான்றிதழை பெற வேண்டும். இதுவரை 454 நிறுவனங்கள் மட்டுமே பெற்றுள்ளன. ஒருமுறை உபயோகித்த சமையல் எண்ணெய்யை சேகரித்து அதிலிருந்து மறு சுழற்சி முறையில் பயோ டீசலாகவோ, சோப் தயாரிப்புக்காகவோ, லூப்ரிகண்டாகவோ பயன்படுத்திட மறுசுழற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஏப்ரல் முதல் நவம்பர் வரை 270. 139 கிலோ லிட்டர் சேகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் முதல் இதுவரை உணவு பாதுகாப்பு துறை மூலம் சூடான உணவு பொருள்களை பிளாஸ்டிக் பைகளில் பயன்படுத்தியதற்காக 232 கடை உரிமையாளர்களுக்கு அபராதமாக ரூ. 4. 64 லட்சம் விதிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன், அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பேக்கரி சங்க நிர்வாகிகள், நுகர்வோர்அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.