கணவன் வீட்டில் வரதட்சனை கொடுமை காரணமாக திருமணம் ஆகி ஒரே ஆண்டிற்குள் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்ணின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டன. தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெரு பகுதியை சேர்ந்தவர் கில்பர்ட். இவரது மகள் அனிஷா. பட்டதாரியான அனிஷாவிற்கும் தூத்துக்குடி லயன் ஸ்டவுன் பகுதியை சேர்ந்த குவைத்தில் வேலை செய்யும் பிரசாத் என்பவருக்கும் கடந்த 2022 ஜனவரி மாதம் 20 ஆம் தேதி திருமணம் நடந்து உள்ளது.
இந்த திருமணத்திற்காக பிரசாத் அவரது குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் 100 பவுன் நகை மற்றும் 4 லட்ச ரூபாய் ரொக்கம் கேட்டுள்ளனர். இதில் கில்பர்ட் தனது மகளுக்கு 70 பவுன் நகை மற்றும் 4 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். மீதி 30 பவுன் நகையை சில மாதங்களில் போடுவதாக கூறியுள்ளார். திருமணம் முடிந்த பிறகு மீண்டும் தான் வேலை பார்க்கும் குவைத்திற்கு சென்ற பிரசாத் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தூத்துக்குடிக்கு வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை அனுசாவின் தந்தை கில்பட்டிருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரசாத், உங்களது மகள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என கூறி இருக்கிறார்.
இதனை அடுத்து மருத்துவமனைக்கு கில்பர்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்று உள்ளனர். அங்கே உங்களது மகள் இறந்து விட்டார் என பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்க அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மகளை இழந்த கில்பர்ட் தனது அனிஷாவை வரதட்சணை கொடுமை காரணமாக பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்து விட்டதாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். பிரசாத் குடும்பத்தினரிடம் உறுதி அளித்த காலத்திற்குள் அனிஷாவின் குடும்பத்தினர் நகையை கொடுக்காத காரணத்தால் அவரை பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. குவைத்தில் இருந்து தூத்துக்குடி வந்தவுடன் பிரசாத் தனது மனைவியிடம் நகை மற்றும் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஓராண்டாகவே அனிஷாவை தாய் வீட்டிற்கு அனுப்பாமல் பிரசாத் குடும்பத்தினர் இருந்து உள்ளனர் என்றும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், செல்போனில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாதபடி அதை லாக் செய்து வைத்து உள்ளனர் எனவும், பிரசாத்தின் குடும்பத்தினரால் அனிஷாவிற்கு பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்து உள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளார்கள். வரதட்சணை கொடுமை காரணமாக தூத்துக்குடியில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி,
-வேல்முருகன்.