அனைத்து வசதிகளும் கூடிய மருத்துவமனை கனவாகவே போய்விடுமா?
வால்பாறை பகுதி பொதுமக்கள் வேதனை!!
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றிலும் நூற்றுக்கு மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன இவற்றில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்துவருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் சமீப காலங்களாக வால்பாறையில் மனித -வனவிலங்குகள் மோதல் அதிகமாக காணப்படுகிறது.
பகல் நேரத்தில் கூட தேயிலை காட்டில் யானை, சிறுத்தை காட்டுமாடு, கரடி போன்ற வனவிலங்குகள் முகாமிட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகிறது சில சமயங்களில் வனவிலங்குகள் தொழிலாளர்களை தாக்கியும் விடுகிறது இதனால் தொழிலாளர்களுக்கு காயம் ஏற்படுகிறது சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டு விடுகிறது.
இந்நிலையில் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாததால் சிகிச்சைக்காக வரும் தொழிலாளர்களை பொள்ளாச்சி, கோவை போன்ற அரசு மருத்துவ மனைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்புகின்றனர் இதுபோன்று அனுப்புவதால் தொலைதூர பயணத்தினால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
எனவே வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட்டுகளின் சார்பில் நகரில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை கட்ட வேண்டும் என்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆனால் இன்றுவரை மருத்துவமனை கட்ட எந்தவித நடவடிக்கையும் எஸ்டேட் நிர்வாகங்களும் தொழிற்சங்க தலைவர்களும் எடுக்கவில்லை. தொழிற்சங்கங்களின் இந்த நடவடிக்கை தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது;
வால்பாறையில் குறைந்த சம்பளத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆபத்தான நேரங்களில் மருத்துவ சிகிச்சை பெற அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை வால்பாறையில் இல்லை.எனவே அனைத்து எஸ்டேட் நிர்வாகங்களும் இணைந்து வால்பாறை நகரில் அனைத்து தொழிலாளர்களுக்கும் பயன்பெறும் வகையில் நவீன வசதியுடன் கூடிய மருத்துவமனை கட்ட வேண்டும் .
இதற்காக தொழிற்சங்க தலைவர்கள் ஆரம்பத்தில் கண்துடைப்பிற்காக போராட்டம் நடத்தினார்கள். எஸ்டேட் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் தொழிற்சங்கங்களின் இந்த நடவடிக்கை கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்கள்.
எது எப்படி இருந்தாலும் ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் பகுதியாக உள்ள வால்பாறையில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை இல்லாமல் இருப்பது வேதனையே.இதற்கு விரைவில் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.