தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முற்றிலும் இலவசமாக விமானம் மூலம் சென்னைக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்தனர். தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியை ரமா தனது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வதற்கும் உறவினர் வீட்டு சடங்குகளுக்கு செல்வதற்கும் பள்ளிக்கு விடுமுறை எடுப்பதை கண்டு இனிமேல் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதாக வாக்களித்தார்.
அதற்கு நல்ல பலன் கிடைத்து மாணவர்கள் விடுமுறை எடுப்பது குறைந்தது. எனவே மாணவர்களை சென்னைக்கு அழைத்து செல்வதென முடிவு எடுத்து பள்ளி செயலர் ஏபிசிவீ. சண்முகம் அவர்களிடம் ஆலோசித்ததில் மகிழ்ச்சியுடன் அனுமதி தந்ததுடன் பயணச்செலவில் பள்ளி நிர்வாகமும் பங்களிப்பதாக கூறினார்கள். மேலும் ஒரு நன்கொடையாளர் உதவி அளிக்க முன்வந்தார். எனவே வகுப்பில் லீவு போடாத 12 மாணவர்களையும் விமானத்தில் முற்றிலும் இலவசமாக சென்னைக்கு அழைத்து செல்வதென முடிவு எடுத்தார்கள். அதன்படி நேற்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் சென்றனர். அங்கு வண்டலூர் உயிரியல் பூங்கா, வள்ளுவர் கோட்டம், மெரீனா கடற்கரை, தமிழ்நாடு முதல்வர் அவர்களின் நலத்திட்ட புகைப்படக் கண்காட்சியையும் கண்டு களித்தனர்.
பின்னர் முத்து நகர் விரைவு ரயிலில் தூத்துக்குடி திரும்பினர்.
மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் பெருமகிழ்ச்சி அடைந்து ஆசிரியருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மாரியப்பன், ஆவுடையப்பன், ரகுபதி, ஆறுமுகசாமி, ஆறுமுகசாமி சங்கரபாகம், கெளரி சங்கர், ரவீந்திரன், ரவீந்திரன் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர். சுற்றுலாவில் மாணவர்களுடன் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, ஆசிரியைகள் ரமா, சரஸ்வதி மற்றும் அந்தோணி ஆஸ்மின் ஆகியோர் சென்றிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடியில்,
-வேல்முருகன்.