சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கைபட்டியில் 1 முதல் 8ஆம் வகுப்புவரை பயிற்றுவிக்கப்படும் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளி மூன்று கட்டிடங்களில் இயங்கி வருகிறது. அவற்றில் 18 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஒரு கட்டிடம், பழுதடைந்த நிலையில் எப்போது இடிந்து விழுமோ என ஆபத்தான நிலையில் இருந்தது. அதுகுறித்து பொதுமக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் அந்தக் கட்டிடம் இன்றுவரை இடிக்கப்படவில்லை. அதன் உள்ளே யாரும் நுழையக்கூடாது எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டி கட்டிடம் பூட்டப்பட்டது.
(குறிப்பிட்ட அந்த கட்டிடம், அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவால் ஒரு தனியாரின் பெயரில் உள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், அந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு அந்தத் தனிநபர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது) மீதமுள்ள இரண்டு கட்டடங்களில் இடநெருக்கடியோடு வகுப்புகள் நடந்து வந்தன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலாண்டுத் தேர்வு விடுமுறையின்போது, மற்றொரு கட்டிடத்தின் மேற்கூறையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து ஆசிரியரின் இருக்கை சுக்குநூறாக உடைந்து கிடந்தது.
அதனைத் தொடர்ந்து, பள்ளியினை ஆய்வு செய்த துறை சார்ந்த அதிகாரிகள், மாணவ மாணவிகளின் பாதுகாப்பை கருதி அந்தக் கட்டிடத்தையும் இழுத்து மூடி பூட்டுப் போட்டனர். மாவட்ட ஆட்சியரும் நேரில் வந்து ஆய்வு செய்து விட்டுச் சென்றார். இதையடுத்து அந்தப் பள்ளியில் கல்வி பயிலும் சுமார் 200 மாணவ மாணவிகளை ஒரு பழைய ஓட்டுக் கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் இ சேவை மைய கட்டிடங்களில் அமர வைத்து பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் போதிய இடவசதியின்றி மாணவர்கள் மரத்தடி நிழலில் அமர்ந்து படித்து வருகின்றனர். புதிய பள்ளிக்கூட கட்டிடங்கள் கட்டுவதற்கு பொறுப்பான ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், செய்தியாளர்கள் அந்த வழியாக செய்தி சேகரிக்க சென்றபோது மரத்தடியில் பாடம் படித்துக் கொண்டிருந்த மாணவ, மாணவியர்களைக் கண்டனர். அந்த நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்காக படம் பிடிக்க துவங்கினர். அதனைக் கண்ட பள்ளியின் தலைமை ஆசிரியை வள்ளியம்மை, மாணவர்களை உடனடியாக பள்ளிக்குள் வர சொல்லி உத்தரவிட்டதால் மாணவர்கள் தலைதெறிக்க பள்ளிக்குள் ஓடினர்.
அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை வள்ளியம்மை வெளியில் வந்து, ‘என்னுடைய அனுமதி இல்லாமல் இங்கு யாரும் படம் பிடிக்கக் கூடாது. நான் யார் தெரியுமா?, நான் உங்கள் மீது காவல்துறையில் புகாரளிப்பேன். உயர் அதிகாரிகளை வரவழைப்பேன்’ என பெருங்குரலெடுத்து செய்தியாளர்களை மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அரசு விதிகளின்படி 25 ஆண்டுகள் உறுதியாக இருக்க வேண்டிய அரசுப்பள்ளி கட்டிடங்கள், தரமில்லாமல் கட்டப்பட்டதால் சுமார் 12 ஆண்டுகளிலேயே பாழடைந்துள்ளன.
கடந்த ஐந்து மாதங்களாக இடப்பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பல்வேறு இடர்பாடுகளுக்கிடையில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
அரசு பள்ளி கட்டிடங்கள் ஆயுட்காலம் முடிவதற்கு முன்பே பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றதற்கும்,
புதிய கட்டிடம் கட்டுவதற்கு உண்டாகும் தாமதத்திற்கும் காரணமான ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், இந்த விடயத்தில் தொடர்ந்து அலட்சியப்போக்குடனே செயல்பட்டு வருகின்றனர்.
மாணவர்களின் நலனில் இனியாவது அக்கறை கொண்டு புதிய பள்ளிக் கட்டிடங்களை விரைவாகவும், தரமானதாகவும் கட்டவேண்டும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் பெற்றோர்கள் மற்றும் கிராமத்தார்கள் உள்ளனர்.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாணவ – மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.