இந்திய கம்யூ ஒன்றியச் செயலாளர் கொலை ! – குற்றம் சாட்டப்பட்டவரும் வெட்டிக் கொலை!!
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச.தமிழார்வன் ஓராண்டுக்கு முன்பு நீடாமங்கலம் கடைத் தெருவில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நடேச தமிழார்வன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பூவனூரைச் சேர்ந்த ராஜ்குமார் (35) மற்றும் 5 பேர் திருவாரூர் நீதிமன்றத்திற்குச் சென்று விட்டு காரில் மன்னார்குடி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது கூத்தாநல்லூர் வட்டம் கமலாபுரம் அருகே வந்த போது எதிரே படுவேகமாக வந்த கார் இவர்களது காரின் மீது மோதியுள்ளது. ஓட்டுநர் காரை நிறுத்தி விட்டு இறங்கியபோது காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ராஜ்குமாரும் இறங்கியுள்ளார். அதேநேரத்தில், எதிரே வந்த காரில் இருந்து 7, 8 பேர் ஆயுதங்களுடன் இறங்கி ராஜ்குமாரை துரத்தியுள்ளனர்.
ராஜ்குமார் அருகில் இருந்த வீட்டுக் கேட்டை திறந்து உள்ளே நுழைந்துள்ளார். அப்போது ராஜ்குமாரின் தலை, கழுத்து, கை என சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் மற்றும் போலீஸார் விரைந்து வந்து பிரேதத்தைக் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-M.சுரேஷ்குமார்.