கோவை மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு தற்போது உள்ள போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கை போதாது என்றும், கூடுதல் போலீஸ் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாநகருக்கு சுந்தராபுரம், கரும்புகடை, கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளை மையமாக கொண்டு புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து இந்த புதிய போலீஸ் நிலையங்களுக்கான இடம் தேர்வு செய்யும் பணி மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் 3 போலீஸ் நிலையங்களுக்கும் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் செயல்படும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட கட்டிடங்களில் இன்ஸ்பெக்டர்கள், எழுத்தர் அறை, கூட்டரங்கு, ஆயுதங்கள் வைக்கும் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் தலா 25 போலீசார் வீதம் மொத்தம் 75 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புதிய காவல் நிலையத்திலும் ஒரு காவல் ஆய்வாளர், இரண்டு காவல் துணை ஆய்வாளர்கள், இரண்டு தலைமைக் காவலர்கள், ஒன்பது கிரேடு-1 காவல்நிலையக் காவலர்கள் மற்றும் 17 கிரேடு-II காவல்நிலையக் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தற்போது சுந்தராபுரம் போத்தனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்டு அதிக பரப்பளவில் உள்ளது. போத்தனூர் நிலையத்தின் அதிகார வரம்பு பிரிக்கப்பட்டு, பெரும்பகுதி சுந்தராபுரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஏற்படுத்தப்பட்ட சுந்தராபுரம் காவல் நிலையத்தை இன்று காலை சுமார் 11:30 மணி அளவில் தமிழக டிஜிபி திரு. சைலேந்திரபாபு அவர்கள் வந்திருந்து ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார்.இந்த திறப்பு விழாவிற்கு காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் மேலும் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கை துறையை சேர்ந்த நண்பர்கள் பலரும் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு, காரம், மற்றும் பாதாம் பால், மோர் ஆகியவை காவல்துறையினரின் சார்பாக வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.