திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப் பட்டது. திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம் ஆகிய பகுதியில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி அதிலிருந்து 72 லட்சத்து 78 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். ஒரே நாளில் திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன் (திருவண்ணாமலை), ராஜேஸ் கண்ணன் (வேலூர்), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), கிரண்ஸ்ருதி (ராணிப்பேட்டை) ஆகியோர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அரியானாவை சேர்ந்த கொள்ளை கும்பல் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி அரியானா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.
கடந்த பிப்ரவரி 21 ம் தேதி திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை கும்பலின் தலைவன் முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் அரியானாவில் கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான ஆசிப் ஜாவேத் என்பவனை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கேயன் தலைமையில் நியமிக்கப்பட்ட தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
ஆசீப்ஜாவேத் என்பவரை பிடிக்க டெல்லி மற்றும் அரியானா பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையிலான தனிப்படையினர் முகாமிட்டிருந்தனர். ஹரியானா ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருந்த ஆசீப்ஜாவேத் என்பவனை தனிப்படையினர் அதிரடியாக துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர் அவரிடமிருந்து ரூபாய் 15 லட்சம் ரொக்க பணம் மற்றும் மாருதி ஸ்விப்ட் கார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து விமானம் மூலம் கொள்ளையனை சென்னை அழைத்து வந்து காவல் வாகனம் மூலம் திருவண்ணாமலை அழைத்து வந்தனர்.பின்னர் அவரை போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக 8பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சத்தையும், 3 கார்கள் மற்றும் ஒரு கண்டெய்னர் லாரியையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இன்று, 12.5.2023 அன்று, ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஹிமாசலபிரதேசம், அசாம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 8 குற்றவாளிகளையும் கைது செய்த வேலூர் ரேஞ்ச் கோர் டீமுக்கு ஒரு லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை காவல்துறைத் தலைவர் டிஜிபி டாக்டர் சைலேந்திர பாபு அவர்கள் வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.