ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலில்படி உலக மிதிவண்டி தினம் (3/06/2023) செயின்ட் ஜோசப் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.
சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணா சிலையின் முன்புறம் துவங்கிய இந்த சைக்கிள் பேரணி நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி முனைவர் மார்கரெட் பாஸ்டின் தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கினார். பேரணியானது சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவிக்கும் விதமாக அமைந்திருந்தது. சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் உருவப்படத்திற்கு அனைவரும் மலர் தூவி மரியாதை செய்தபின், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து கொடியசைத்து மிதிவண்டி பேரணியை தொடங்கி வைத்தார்.
இப்பேரணியானது சிங்கம்புணரி பேருந்து நிலையம் அண்ணா சிலையிலிருந்து தொடங்கி காளாப்பூர் பேருந்து நிறுத்தம்வரை சென்று, பிறகு அங்கிருந்து செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியை சென்றடைந்தது. அங்கு பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் குளிர்பானம் வழங்கியபின் நிகழ்வு நிறைவு பெற்றது. மாணவிகளின் பேரணியானது 2 மணி நேரம் நடைபெற்றது. சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் கடந்திருந்தனர். பேரணிக்கு சிங்கம்புணரி மற்றும் சதுர் வேதமங்கலம் காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இந்நிகழ்விற்கு சிங்கம்புணரி பேரூராட்சி துணைத்தலைவர் இந்தியன் செந்தில் முன்னிலை வகித்தார். மேலும் சமூக ஆர்வலரும், கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவருமான முனைவர் மணியன் மற்றும் 7வது வார்டு கவுன்சிலர் மீனா அமுலரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியை கல்லூரியின் கணிதத்துறை தலைவரும், என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப் பாளருமான முனைவர் சுதா ஏற்பாடு செய்திருந்தார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.