கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியாம்பாளையம் கிராமத்தில் உள்ள முட்புதருக்குள் நேற்று அதிகாலை குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு பிறந்து சிலமணி நேரங்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை கிடந்தது. இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தனபால், ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முட்புதரில் சிக்கி கிடந்த குழந்தையை பார்த்தனர்.
இதில் அந்த குழந்தைக்கு உடலில் ஆங்காங்கே சிராய்ப்பு காயங்கள் இருப்பது தெரியவந்தது. எனவே ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு உடல்எடை மிகவும் குறைவாக இருப்பது தெரிய வந்தது. எனவே அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு டாக்டர்கள் தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அன்னூரில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சிசு முட்புதருக்குள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்காதலில் குழந்தை பிறந்ததால் குழந்தை முட்புதரில் வீசுப்பட்டதா? அல்லது பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோர் விரக்தியில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்று தெரியவில்லை. இதுகுறித்து அன்னூர் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.