சென்னை திருவல்லிக்கேணி அப்பாவு தெரு பகுதியை சேர்ந்தவர் ராசு மற்றும் சத்தியா தம்பதியினர். இவர்கள் அதே பகுதியில் சாலையோர சலவை கடை நடத்தி வருகின்றனர். கடந்த 6 ஆம் தேதி அன்று கடையை மூடி விட்டு மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது, அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் உள்ளே இருந்த இஸ்திரி பெட்டி மற்றும் சில்லரை பணம் திருடு போய் உள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதே போல் பிக் தெருவில் இரண்டு இடங்களில் இஸ்திரி பெட்டி கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடைப்பெற்றதாக வந்த தொடர் புகாரை அடுத்து உதவி ஆணையர் பாஸ்கர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அதிலும் குறிப்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இருசக்கர வாகனத்தில் வரும் டிப்டாப் ஆசாமி ஒருவர் இஸ்திரி பெட்டிகளை திருடியது தெரியவந்தது. இருசச்கர வாகன எண்ணை வைத்து போலீசார் தேடி வந்த நிலையில் வண்ணாரப்பேட்டை ஐஓசி தெருவை சேர்ந்த அஜயன்(43)என்பவர் இந்த திருட்டில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், காசிமேட்டில் பிரபல ரவுடியாக இருந்த பவுடர் ரவியின் கூட்டாளியாக இருந்ததாகவும் , பின்னர் திருட்டு வழக்குகளில் ஈடுப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. கடைசியாக எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று விட்டு வெளியே வந்த நிலையில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெரிய திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டால் போலீசார் பிடித்து விடுவார்கள் என இஸ்திரி கடைகளில் உள்ள அயன்பாக்ஸ்களை திருடி, அதனை இரண்டாக உடைத்து பழைய இரும்பு கடைகளில் போட்டு, ஒவ்வொன்றும் 7 கிலோ வரை வரும் என்பதால் அதனை எடைப்போட்டு வரும் பணத்தில் செலவிட்டு வந்ததும், இஸ்திரி பெட்டி என்பதால் புகார் அளித்தாலும் போலீசார் நடவடிக்கை கண்டுகொள்ளமாட்டார்கள் என திருட்டில் ஈடுப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தேனாம்பேட்டை, அபிராமபுரம், மைலாப்பூர் உள்ளிட்ட 40 இடங்களில் இஸ்திரி பெட்டிகளை குறிவைத்து திருடியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மேலும் அவரிடம் போலீசார் விசாரணையில் அவரது கூட்டாளியான எர்ணாவூரைச் சேர்ந்த ராமசந்திரன்(49) என்பவரின் மூலம் திருடிய அயன்பாக்ஸ்களை விற்றதும் பல இடங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து அயன்பாக்ஸ் திருடுவதையும் வாடிக்கையாக கொண்டு வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து ராமச்சந்திரனை கைது செய்த போலீசார் இருவரிடமிருந்தும் 38 அயன்பாக்ஸ்களை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர். கொள்ளையர்கள் இஸ்திரி பெட்டிகளை மட்டும் குறிவைத்து திருடிய இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
– தமிழரசன், மேலூர்.