திருச்சியில் வழக்கை சாதகமாக முடிக்க ₹.3000 லஞ்சம் வாங்கிய விபசார தடுப்புப் பிரிவின் பெண் சார்பு ஆய்வாளர் கைது!
கேரள மாநிலம், கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் கேரளா ஆயுர்வேத மசாஜ் சென்டரை நடத்திவருகிறார். இந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதம் விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் திடீரென அங்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் அந்த மசாஜ் சென்டரில் சட்டவிரோதமாக விபசாரம் நடப்பதைக் கண்டறிந்து, உரிமையாளரான அஜிதா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், விபசார தடுப்புப் பிரிவின் சார்பு ஆய்வாளர் ரமா என்பவர், “இந்த வழக்கில் உனக்கு எந்தப் பிரச்னையும் வராமல் பார்த்துக்கொள்வதோடு, வழக்கை உனக்குச் சாதகமாக முடித்துக்கொடுக்கிறேன்.
மேலும், உன் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்யாமல் இருக்கவும் 10,000 ருபாய் லஞ்சமாகத் தர வேண்டும்” என மசாஜ் சென்டர் உரிமையாளரான அஜிதாவிடம் பேரம் பேசியிருக்கிறார். அதற்கு அஜிதாவோ, “காவல்துறை ரெய்டுக்குப் பிறகு மசாஜ் சென்டரை நடத்த முடியாமல் இருப்பதால், பொருளாதாரரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே, 10,000 ரூபாய் தர இயலாது” எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், சார்பு ஆய்வாளர் ரமாவோ விடாப்பிடியாய், “சரி அட்வான்ஸாக 3,000 ரூபாயாவது கொடு. வழக்கை உனக்குச் சாதகமாக முடித்துக்கொடுத்த பிறகு, மிச்சப் பணத்தை வாங்கிக்கொள்கிறேன்!” எனக் கூறியிருக்கிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சார்பு ஆய்வாளர் ரமாவுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜிதா, இந்த விஷயத்தை திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து புகாரளித்துள்ளார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல், திருச்சி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர் சக்திவேல், சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினரின் ஆலோசனையின் பேரில் அஜிதா, ரமாவிடம் திங்கள்கிழமை காலை, காவல் நிலையத்தில் வைத்து ரூ.3000 லஞ்சப்பணத்தைத் தந்துதுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்து கண்காணிப்பில் இருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சார்பு ஆய்வாளர் ரமாவை கையும் களவுமாகப் பிடித்தனர். அதையடுத்து, தீவிர விசாரணைக்கு பின்பு ரமாவுக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதன் இருக்கையின் கீழ் கட்டுக்கட்டாக இருந்த 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றினர். அப்பணம் பற்றி ராமாவிடம் கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின்னாக முரணான தகவல் கூறியதால் அந்த பணம் ஸ்பா சென்டர் உரிமையாளர்களிடமிருந்து லஞ்சமாக பெற்ற பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காவல் சார்பு ஆய்வாளர் ரமா, விபச்சாரத் தடுப்புப் பிரிவில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாநகரில் சுமார் 60 மசாஜ் (ஸ்பா சென்டர்கள்) இயங்கி வருகின்றன. இதில் ஒரு ஸ்பா சென்டருக்கு மாதம் ரூ.10,000 முதல் 20,000 வரை ரமாவின் வங்கி கணக்கிற்கு கூகுள் பே மூலம் பெற்று வருகிறார் என்பதும், இத்தொகையை ரமா லஞ்சமாகப் பெற்று தனது உயர் அதிகாரிகளுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் ரமா, யார் யாருக்கு எவ்வளவு தொகை கொடுத்துள்ளார் என்ற விபரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சார்பு ஆய்வாளர் ரமாவுக்கு லஞ்சம் வசூல் செய்து கொடுத்த புரோக்கர்கள் மற்றும் உடந்தையாக இருந்த விபச்சார தடுப்பு பிரிவு காவலர்கள் சிலர், லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை வளையத்திற்குள் சிக்கவுள்ளனர்.
விபசாரம் நடப்பதைக் கண்காணித்து, அதைத் தடுக்க வேண்டிய காவல் சார்பு ஆய்வாளரே, ஒவ்வொரு மாதமும் லஞ்சம் வாங்கிக் கொண்டு அதைக் கண்டுகொள்ளாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் சிக்கியிருப்பது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– பாரூக்.