தூத்துக்குடி பனிமய மாதா கோவில் தங்க தேர் திருவிழா வருகிற 26ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை திருவிழா நடைபெறும்.தனி நபர் குழுக்கள் நடத்தும் பொருட்காட்சியை சேவியர் உயர்நிலைப் பள்ளிக்கு சொந்தமான, விளையாட்டு திடலில் நடத்த அனுமதிக்க கூடாது என்றும், தடையில்லா சான்று வழங்க கூடாது என்றும், மக்களுக்கு பாதுகாப்பான இடத்தினை தமிழக அரசே தேர்வு செய்ய வேண்டும் என்றும் குரூஸ்புரத்தைச் சேர்ந்த இன்னாசி என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதியரசர் சுந்தர் மற்றும் நீதியரசர் பரத சக்கரவர்த்தி ஆகியோரின் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தங்களையும் தரப்பினராக சேர்க்கக்கோரி சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம், தனியார் பொருட்காட்சி குழுவின் சார்பில் அதன் செயலாளர் சுதாகர் மற்றும் தங்க தேர் திருவிழா கமிட்டியின் சார்பில் ஜான்சி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு எதனையும் பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையினை வருகின்ற 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் நீதிமன்றத்தில் இது தொடர்பாக முழுவிசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஶ்ரீவைகுண்டம் நிருபர்,
-முத்தரசு கோபி.