உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் 55 க்கும் மேற்பட்டோர் லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயில் மூலம் கடந்த 17ஆம் தேதி தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் சுற்றுலா ரயிலில் ராமேஸ்வரம் சென்றுள்ளனர். அப்போது ஒரு ரயில் பெட்டியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. குபுகுபுவென ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலியாகிவிட்டனர். அதில் 8 பேரின் அடையாளம் தெரிந்துவிட்டது.
இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவர் ஆணா, பெண்ணா என்பது கூட அடையாளம் தெரியாத நிலை உள்ளது. இறந்தவர்களின் உடல்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்த விசாரணையில் தீப்பிடித்ததற்கு இவர்கள் ரயிலில் கொண்டு சென்ற சிலிண்டரே காரணம் என சொல்லப்படுகிறது. இந்த சிலிண்டர் வெடித்ததில்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது தெரியவந்தது. அதாவது ரயில் பெட்டியை பூட்டிக் கொண்டு இவர்கள் சமைத்ததால் தீப்பிடித்தவுடன் அவர்களால் வெளியேற முடியாமல் உடல் கருகி இறந்தனர்.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு டீ குடிப்பதற்காக சிலிண்டரை ஆன் செய்துள்ளனர். அப்போதுதான் இந்த விபத்து நடந்தது. ரயில் பெட்டியை ஏன் பூட்டினார்கள் என காயமடைந்த பயணிகளிடம் கேட்ட போது வடமாநில கொள்ளையர்கள் யாரேனும் ரயில் பெட்டியில் வந்து கொள்ளையடித்து விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு கருதியே ரயில் பெட்டியை உள்பக்கமாக பூட்டிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் சம்பவ இடத்திற்கு வருகை தருகிறார். எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை ரயில்களில் கொண்டு செல்ல தடை இருக்கும் போது இவர்கள் எப்படி சிலிண்டரை கொண்டு சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
சம்பவம் இடத்தை மாவட்ட ஆட்சியர் சங்கீதா , காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து ஆய்வு செய்ய தெற்கு ரயில்வே கூடுதல் மேலாளர் கவுசல் கோஷன் , ரயில்வே பாதுகாப்புப் படை ஐஜி சந்தோஷ் சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மதுரை விரைந்துள்ளனர்.
இதற்கிடையில் சம்பவ இடத்தை பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியும் ஆய்வு செய்து மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது மாலை முரசு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமைச்சர் மூர்த்தி, விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில் மதுரை, ரயில் தீ விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தெற்கு ரயில்வே தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தது.
-தமிழரசன், மேலூர்.