வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசுக்கும், ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பவர்கள் ஊராட்சிச் செயலர்கள். அந்தப் பணியில் இருப்பவர்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் ஒரே ஊராட்சியில் பணிபுரியும் போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளதால், அரசு விதிகளின்படி குறிப்பிட்ட கால அவகாசத்தில் அவர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 30 ஊராட்சிகளில் அணைக்கரைப்பட்டி
(வடிவேலன் – 19 வருடம்),
செல்லியம்பட்டி
(மல்லிகா 25 – வருடம்),
அ.காளாப்பூர்
(ரமேஷ் – 25 வருடம்),
கோழிக்குடிப்பட்டி
(விமலா 16 – வருடம்),
மல்லாகோட்டை
(ருக்குமணி – 25 வருடம்),
எஸ்.மாம்பட்டி
(முத்துமீனா – 14 வருடம்),
முறையூர்
(அமராவதி – 13 வருடம்),
எஸ்.எஸ்.கோட்டை
(ராதா – 21 வருடம்).
எஸ்.வையாபுரிப்பட்டி
(மதிவாணன் – 23 வருடம்)
ஆகிய 9 ஊராட்சிகளில் மட்டும் பணியில் உள்ள ஊராட்சிச் செயலர்கள், விதிகளை மீறி குறைந்தபட்சம் 13 ஆண்டுகளிலிருந்து அதிகபட்சம் 25 ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணிபுரிந்து வருவதை, சமூக செயற்பாட்டாளர் ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அம்பலப்படுத்தியிருந்தார். அது குறித்து 18/12/2022 அன்று நாளைய வரலாறு புலனாய்வு இதழில் செய்தி வெளியிடப்பட்டது (https://nalaiyavaralaru.com/2022/12/சிங்கம்புணரி-ஊராட்சி-ஒன்/).
ஆனால், அப்போதிருந்த மாவட்ட நிர்வாகம் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காதிருந்த நிலையில், தற்போதுள்ள சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணிபுரிபவர்கள், நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் செய்யப்பட வேண்டும் என 10 நிபந்தனைகளுடன் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் (கிராம ஊராட்சி) கடந்த கடந்த ஜுலை மாதம் (24/07/23 தேதியன்று)
உத்தரவிட்டார்.
அதன் பின்பும் இன்றுவரை சுமார் ஒரு மாதமாகியும் தொடர்ந்து ஒரே ஊராட்சியில் 13 ஆண்டுகளிலிருந்து, 25 ஆண்டுகள் வரை பணிபுரியும் எந்த ஒரு ஊராட்சிச் செயலரும் பணியிட மாறுதல் செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.
கிராம ஊராட்சிச் செயலர்களின் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் குவிந்திருப்பதாக கூறப்படும் நிலையில், ஊராட்சிகளின் நிர்வாக நலன் கருதி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவையே நடைமுறைப்படுத்தாமல் காற்றில் பறக்க விடும் சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேறு யாருடைய உத்தரவிற்கு கட்டுப்படுவார்கள்? என்றும், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சிச் செயலர்கள், சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் 10 நிபந்தனைகளுக்கு உட்பட்டு விரைவில் பணியிட மாறுதல் செய்யப்படுவார்களா என்றும் சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே தற்போது கேள்வி எழுந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) லட்சுமண ராஜாவிடம் பேசிய போது, ‘ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஊராட்சியில் செயலராகப் பணிபுரிபவர்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் கவுன்சிலிங் மூலமாக இடம் மாறுதல் செய்யப்படுவார்கள்’ எனத் தெரிவித்தார்.
– பாரூக் & ராயல் ஹமீது.