கோவை செல்வ சிந்தாமணி குளத்தை பராமரிக்க வேண்டும் என்று செல்வ சிந்தாமணி குளம் வாக்கர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வ சிந்தாமணி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்கள் அழகு படுத்தப்பட்டு, நடை பயிற்சி மேற்கொள்வதற்குரிய நடைபாதை களும் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கபட்டது.
பேரூர் சாலையில் உள்ள செல்வ சிந்தாமணி குளத்தை ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பல்வேறு புணரமைப்பு பணிகளை செய்து, கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் இயந்திரங்களையும் பொருத்தி அவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திறந்து விட்டது. அதன் பிறகு மாநகராட்சி அதிகாரிகள் இதன் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவே இல்லை.
காலையும் மாலையும் இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மூன்றாண்டுகளாக சரியாக பராமரிக்கப்படாத நிலையில் தற்போது இந்த பகுதி புதர்மண்டி கிடக்கிறது. தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துகொண்டே வருகிறது. நடைபாதை ஆங்காங்கே உடைந்து கிடக்கிறது. பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்குரிய கருவிகள் உடைந்தும், நொறுங்கியும் காணப்படுகின்றன.
பொதுமக்கள் அமர்ந்து பேசுவதற்காக போடப்பட்ட மேடைகள் உடைந்து, புதராகவே காட்சியளிக்கிறது. இரவு நேரத்தில் விளக்குகள் எரிய விடுவதில்லை. எனவே சமூகவிரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் அவசரத்திற்கு ஒதுங்குவதற்கு கழிப்பிட வசதி இல்லை. மழை வந்துவிட்டால் ஒதுங்கி நிற்க கூரை அமைப்புகள் இல்லை.
இதையெல்லாம் மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். தினம்தோறும் இந்த குளத்தையும், நடைபாதையையும் பராமரிக்க வேண்டும். குளத்தை சுற்றி தெரு விளக்குகளை எறிய விட வேண்டும். ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். குளத்தை சுத்திகரிக்க வேண்டும். ஆகாயத்தாமரை அகற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தற்போது செல்வ சிந்தாமணி குளம் வாக்கர்ஸ் அசோசியேஷன் முன்வைத்துள்ளது.
இதுகுறித்து வாக்கர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் கூறும்போது, ” மேற்கண்ட இந்த கோரிக்கைகளை பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனுக்களாக கொடுத்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளை செல்வ சிந்தாமணி குளம் வாக்கர்ஸ் அசோசியேசன் தலைவர் ரங்கராஜன், செயலாளர் கண்மணி பாபு, பொருளாளர் தீபம் ராஜா, முஹம்மது ஹனீப். சுரேஷ்குமார். உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அசோசியன் நிர்வாகிகள் ஜெகன்,மல்லி,ராதாகிருஷ்னன், வைரம், நாகராஜ், விஷ்னு, சீதாலட்சுமி, சுரேஷ், வாக்கர்ஸ் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.