பல்லடத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறி, தொடர்பில்லாத வீடியோவை சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பக்கூடாது’ என, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
பல்லடம், கள்ளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற விவசாயி, தாராபுரம் – பல்லடம் ரோட்டில் ஜீப்பில் சென்ற போது, சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதாக கூறினார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் மத்தியில், பீதி அதிகரித்தது. அதே நேரம், ஊருக்குள் சிறுத்தை நடமாடுவது போன்ற ‘வீடியோ’வையும், சிலர், சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர்.
திருப்பூர் வனத்துறை ரேஞ்சர் சுரேஷ்கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர். சிறுத்தை நடமாட்டம் இருந்தாக கூறப்பட்ட இடத்தில், கால்தடங்களையும் ஆய்வு செய்தனர்.
இது குறித்து, ரேஞ்சர் கூறியதாவது:
ஊதியூர் மலைப்பகுதியில் இருந்த சிறுத்தை இடம் பெயர்ந்து, பல்லடம் கள்ளிப்பாளையம் பகுதிக்கு வந்திருக்கலாம் என்ற அடிப்படையில் அங்குள்ள மக்கள் பீதியை கிளப்பினர். விலங்கின் கால்தடங்களை ஆய்வு செய்ததில், நாய்களின் கால்தடம் தான் கிடைத்துள்ளது.
அங்கு சிறுத்தை எதுவும் இல்லை. ஊருக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பது போன்ற வீடியோவை சமூக வலை தளங்களில், சிலர் பரப்பி வருகின்றனர். அதுபோன்ற சம்பவங்கள், நம் மாநிலத்தில் நடக்கவில்லை; பிற மாநிலங்களில் தான் நடந்துள்ளது. நான்காண்டுக்கு முன் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோவை, தற்போது நடந்தது போன்று சிலர் பரப்பி விடுகின்றனர்.
இதுபோன்ற தொடர்பில்லாத ‘வீடியோ’வை, சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்ப வேண்டாம் என,
மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
கடந்த, மார்ச்சில், ஊதியூர் காப்புக்காடு பகுதியில், ஒரு சிறுத்தை தஞ்சம் புகுந்தது. அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியே வந்த சிறுத்தை, குடியிருப்பையொட்டி கால்நடை பட்டியில் இருந்த நாய், ஆடு உள்ளிட்ட விலங்குகளை தாக்கி இழுத்து சென்றது. காங்கயம் ரேஞ்சர் தனபாலன் தலைமையிலான வன ஊழியர்கள், கேமரா வைத்து, சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.
கடந்த மாதம், 7ம் தேதிக்கு பின், கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை தென்படவில்லை. இதற்கிடையில், ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதாக வெளியான தகவலையடுத்து, அங்குள்ள வனத்துறையினர் கேமரா வைத்து கண்காணித்து வருகின்றனர். சிறுத்தையின் உருவம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு வேளை, ஊதியூர் சிறுத்தை அங்கு சென்றுவிட்டதா என, உறுதிபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இருப்பினும், மக்களின் பாதுகாப்பு கருதி, ஊதியூர் மலைப்பகுதியில் மக்கள் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு தொடரும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.