மருதமலை பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், கோயிலில் காலை 6.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவாரம் முதல் மலைக்கோயில் செல்லும் மலைவழிப் பாதை 2,500 மீட்டா் உள்ளது. மலைப் பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை (09.10.2023) முதல் ஒரு மாதத்துக்கு கோயிலுக்கு பேருந்துகள், காா், இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தா்கள் படிவழிப் பாதையில் மட்டுமே வந்து சுவாமி தரிசனம் செய்யலாம். மேலும், தற்போது வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் காலை 6.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்க இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது மருதமலை கோயில் படிப் பாதையில் சிறுத்தை நடமாடும் விடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
மருதமலை கோயில் படிப் பாதையில் உள்ள தான்தோன்றி விநாயகா் கோயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில் படிப் பாதை வழியாக நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இது தொடா்பான விடியோ சமுகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
கோயிலுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் படிப் பாதையை மக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது, படிப் பாதையில் சிறுத்தை உலவியதால், பக்தா்களின் பாதுகாப்பை வனத் துறையினா் உறுதி செய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.