கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் விபத்துகளைக் குறைப்பது தொடா்பான விழிப்புணா்வு குறுந்தகடை (சிடி) மாநகர காவல் ஆணையா் வே. பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாநகரை சிக்னல் இல்லா மாநகராக்கும் முயற்சியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது. வட்ட பூங்கா, யூ -டா்ன் திருப்பம் அமைக்கப்பட்டதன் மூலம் பயணத்தின்போது காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளதோடு, விபத்துகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதில், கோவை மாநகர காவல் துறை, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதிலும், விபத்துகளைக் குறைப்பதிலும் வெற்றி கண்டுள்ளது. பேருந்துகள் திரும்பும் இடங்களில் உள்ள நெருக்கடிக்குத் தீா்வு காணும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினரிடம் கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. பழைய சிக்னல்களை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தங்கள் ஆய்வு செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்படும். முதற்கட்டமாக கோவை மாநகரில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த போக்குவரத்து மாற்றத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக, இந்த சாலைகளில் நாள்தோறும் பயணிக்கும் வாகன ஓட்டிகள் திருப்தி தெரிவித்துள்ளனா் என்றாா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.