மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கம்பூர், சேக்கிப்பட்டி மற்றும் அய்யாப்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள மலைகளை வெட்டி எடுப்பதற்கான கிரானைட் குவாரி ஏலத்தை ரத்து செய்யக் கோரியும், முன்னாள் மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் குழு கண்டறிந்த கிரானைட் கொள்ளை அறிக்கையை வெளியிட கோரியும் சமூக ஆர்வலர் கம்பூர் செல்வராஜ் அவர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்குகளை நீக்க கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பறம்புமலை பாதுகாப்பு இயக்கம் தலைமையில் அதன் தோழமை இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் வெகுதிரளாக கலந்து கொண்டு போராட்டம் நடத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கம்பூர், சேக்கிப்பட்டி மற்றும் அய்யாப்பட்டி போன்ற பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையிலான கிரானைட் கல் குவாரிகளை அமைக்கக் கூடாது என்று தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் இப்போராட்டத்தை முடக்கும் விதமாகப் போராட்டத்தின் முக்கிய செயல்பாட்டாளரான கம்பூரைச் சார்ந்த திரு. செல்வராஜ் அவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 110 இன் கீழ் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இச்சட்டப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து பேசிய பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு கர்ணன் அவர்கள் கூறியதாவது
“மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம், கம்பூர் ஊராட்சியில் இளைஞர்கள் பலருடன் கிராமசபைக்காகவும் தனது ஊர் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து இயங்கி வருகின்ற, சமீபத்தில் விகடன் குழுமத்தின் டாப் 10 இளைஞர்கள் விருது வாங்கிய இளைஞர்களால், கிரானைட் கல்குவாரிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அப்பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்போரட்டங்கள் திரு. செல்வராஜ் அவர்களால் அங்கு ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திரு. செல்வராஜ் அவர்கள் மீது ஏற்கனவே போடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியது (Cr.No 77/2023) மற்றும் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மது அருந்திவிட்டு அரசுப் பணி செய்ய விடாமல் இடையூறு செய்தது (Cr.No 239/2023) போன்ற இரண்டு முரண்பட்ட வழக்குகளைக் காரணம் காட்டி குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு (CRPC) 110 கீழ் குற்ற எண் 63/2023 இன் படி ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏன் நன்னடத்தைப் பத்திரம் எழுதித் தரக்கூடாது என்ற காரணத்தைக் கூறுமாறு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக குற்றவியல் செயல்களில் ஈடுபடுவோர் மீது பதியப்படும் இச்சட்டம், ஒரு சமூக செயல்பாட்டாளர் மீது பதியப்பட்டு அவரைச் செயல்பாட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முடக்கும் இந்நடவடிக்கையைத் பறம்புமலை பாதுகாப்பு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தன்னாட்சி இயக்கம் கூறியதாவது “தமிழ்நாட்டில் பொதுமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக, சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து போராடும் சமூக செயல்பாட்டாளர்கள் மீது இது போன்ற கருப்புச் சட்டங்கள் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இது அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் ஒன்றான அமைதியான வழியில் போராடும் உரிமையைத் திட்டமிட்டு பறிக்கும் செயலாக உள்ளது. எனவே, கம்பூரைச் சார்ந்த திரு. செல்வராஜ் அவர்கள் மீது CRPC 110 கீழ் கோட்டாட்சியர் மூலம் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அவரின் செயல்பாடுகளை முடக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிடுவதோடு அதில் காரணம் காட்டப்பட்டுள்ள Cr.No 77/2023 மற்றும் Cr.No 239/2023 போன்ற வழக்குகளையும் உரிய விசாரணைக்குப் பிறகு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தன்னாட்சி கேட்டுக் கொள்கிறது. மேலும், மேலூர் வட்டாரப் பகுதிகளில் கிரானைட் கல் குவாரிகளை அமைக்கும் முன்னர் அப்பகுதி மக்களிடம் உரிய கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு முடிவெடுக்குமாறும், இது தொடர்பாகக் கம்பூர், சேக்கிப்பட்டி மற்றும் அய்யாப்பட்டி போன்ற ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்ட கிராமசபைத் தீர்மானங்களையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தைக் தன்னாட்சி இயக்கம் கேட்டுக்கொள்கிறது”.
இந்நிலையில் திரு சகாயம் ஐஏஎஸ் குழு ஆய்வறிக்கையில் : மேலூர் பகுதியில் உள்ள மலைகள் 250 கோடி ஆண்டுகள் பழமையானவை , அரியவகை தாவரங்கள் பல்லுரிகள் இங்கே வாழ்கின்றன. இவை பாதுகாக்கப்பட வேண்டியவை என வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இயற்கை நமக்கு அளித்த மலைகள் என்னும் கொடைகளை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
– தமிழரசன், மேலூர்.
.