சாலைப் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், வால்பாறை- சாலக்குடி இடையே நவம்பா் 21-ஆம் தேதி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடிக்கு 110 கி.மீ. தொலைவு. இதில் 84 கி.மீ. சாலைகள் கேரள மாநிலத்துக்குள்பட்டவையாகும். கனமழை சமயங்களில் இந்த சாலைகளில் மரம் விழுவதுடன், மண்சரிவும் ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து பாதிப்படைவது வழக்கம்.
இந்நிலையில், கேரள மாநிலத்துக்குள்பட்ட அம்மளப்பாறை பகுதியில் கடந்த வாரம் பெய்த மழையால் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, மண் சரிவு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்தது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை மாலை பெய்த கனமழையால் அதே பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து, சாலைகளை சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்த பணி நவம்பா் 21- ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், அதுவரை வால்பாறை- சாலக்குடி இடையே போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாக திருச்சூா் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.