கோவை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி!! இருபத்தைந்து குழுக்களைச் சேர்ந்த 140 பேர் பங்கேற்பு!!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மாநில முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி கோவை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை நடத்துவதென வனத்துறை நிர்வாகம் முடிவுசெய்தது.

தொடர்ந்து வனஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட 25 குழுக்களை சேர்ந்த 140 பேர் கணக்கெடுப்பு பணிக்கு தேர்வுசெய்யப்பட்டனர். இதற்காக அவர்களுக்கு பிரத்யேக அம்சங்கள், எப்படி கணக்கெடுப்பு நடத்துவது ஆகியவை தொடர்பான பயிற்சிகள், கோவை மாவட்ட வனத்துறை சார்பில் வழங்கப்பட்டன. அடுத்தபடியாக கடந்த 27, 28-ந்தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.


இதன் ஒரு பகுதியாக வாளையார் அணை, உக்கடம் குளம், குறிச்சிகுளம், செங்குளம், வெள்ளலூர் குளம், சிங்காநல்லூர் குளம், கண்ணம்பாளையம் குளம், பள்ளபாளையம் குளம், இருகூர் குளம், பேரூர் குளம், கிருஷ்ணாம்பதி, கோளராம்பதி, நரசாம்பதி, செல்வாம்பதி, வேடப்பட்டி, சூலூர் குளம், ஆச்சான்குளம், சாளப்பட்டி, செம்மேடு குளம், பெத்திகுட்டை உள்ளிட்ட மொத்தம் 25 நீர் நிலைகளில் வசிக்கும் பறவைகள் தொடர்பாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது அங்கு ஒருசில அரியவகை பறவை இனங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்களும் கண்டறியப்பட்டு உள்ளன. அதிலும் குறிப்பாக 2 நாட்கள் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில் மொத்தம் 201 பறவை இனங்கள் மற்றும் 16 ஆயிரத்து 69 பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன. மேலும் 60 இனங்களை சேர்ந்த 7234 நீர்ப்பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன இதுதவிர உக்கடம் குளத்தில் 2288, வாளையார் 1797, கிருஷ்ணாம்பதி 1387 ஆகிய நீர்நிலைகளில் அதிக பறவைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்து உள்ளது. மேலும் இருகூர், வேடப்பட்டி, நரசம்பதி உள்ளிட்ட சதுப்பு நிலங்களில் பறவைகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் இருகூரில் 31, வேடப்பட்டியில் 32 என குறைந்த எண்ணிக்கையில் பறவை இனங்கள் பதிவாகி உள்ளன. பெத்திக்குட்டை, கிருஷ்ணாம்பதி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 101 பறவை இனங்கள் இருப்பது தெரியவந்து உள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பறவை இனங்களின் சராசரி 54 முதல் 75 வரை அதிகரித்து உள்ளது. அதன்படி கடந்தாண்டு 20 நீர்நிலைகளில் எடுக்கப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை 9494 ஆக இருந்தது. ஆனால் தற்போது 25 நீர்நிலைகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பறவைகளின் எண்ணிக்கை 16069 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் நத்தைகுத்தி நாரை, கருந்தலை மீன்கொத்தி, நீர்க்கோழி, இந்திய காட்டு காகம், தவிட்டு குருவி, சின்னத்தோல் குருவி, வண்ணநாரை, செந்நாரை, நீலச்சிறகி, சிறு முக்குளிப்பான், தாழைக் கோழி, வெண்கழுத்து நாரை, வயல்கதிர் குருவி போன்ற பறவைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கோவை மாவட்டத்தில் நிலப்பகுதிகளில் வசிக்கும் பறவைகளுக்கான கணக்கெடுப்பு பணி வருகிற மார்ச் மாதம் 1,2-ந்தேதிகளில் நடைபெற உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp