கோவையில் இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனை நடந்ததை செல்போனில் வீடியோ எடுத்த மெக்கானிக் மீது தாக்குதல் நடத்திய டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் அப்பாஸ்(29). கார் மெக்கானிக். இவர் நேற்று இரவு 10.30 மணியளவில் தனது உறவினர் ஒருவரை தேடி குனியமுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் பாருக்கு சென்றார். அப்போது அங்கு இரவு 10 மணியை தாண்டியும் மது விற்பனை ஜோராக நடந்துள்ளது. இதனை அப்பாஸ் தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.
இதனை பார்த்த பார் ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் பேசி அப்பாசை அடித்து உதைத்தனர். இது குறித்து அப்பாஸ் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பாசை தாக்கிய டாஸ்மாக் பார் ஊழியர்கள் திருச்சி மருங்காபுரியை சேர்ந்த சேகர்(25), குழந்தைவேல்(32) மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த முகேஷ் கண்ணன்(24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அந்த பாரில் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்றதா? என்பது குறித்தும், பார் உரிமையாளர் சுபாஸ் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.