கொடும்பாவி எரிப்புப் போராட்டம் அறிவிப்பு!!

பிப்ரவரி 16 அன்று தஞ்சையில் மேக்கேதாட்டு அணைக்கு ஒப்புதலுக்கு எதிராக கொடும்பாவி எரிப்புப் போராட்டம்! காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு!

மேக்கேதாட்டு அணைக்கு ஒப்புதல் வழங்கித் தீர்மானம் இயற்றி, அதனை இந்திய ஒன்றிய நீர்வள ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ள காவிரி ஆணையத் தலைவர் ஹல்தரின் கொடும்பாவியை எரித்து, தஞ்சையில் வரும் 16.02.2024 அன்று போராட்டம் நடைபெறும் என காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம், இன்று (08.02.2024) தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை வகித்தார். கா.உ.மீ.கு. பொருளாளர் திரு. த. மணிமொழியன், ஆழ்துளைக் கிணற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. புண்ணியமூர்த்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழர் தேசியக் களம் அமைப்பாளர் தோழர் ச. கலைச்செல்வம், மன்னை இராசசேகரன், சாமி. கரிகாலன், துரை. இரமேசு, புதுப்பட்டி செல்வம், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், வல்லம்புதூர் பாலன், மகளிர் ஆயம் துணைத் தலைவர் தோழர் செம்மலர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்:-

கர்நாடக அரசு தனது மாநில எல்லையான மேக்கேதாட்டில், 67.15 ஆ.மி.க. (டி.எம்.சி) கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம் கட்டிக் கொள்ள ஒப்புதல் தெரிவிக்கும் வகையில், கடந்த 1.2.2024 அன்று நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்திய அரசின் நீராற்றல் துறைக்கு அனுப்பி உள்ளது. கர்நாடக அணைகள் நிரம்பி வெளியேறும் வெள்ள நீர் தமிழ்நாட்டிற்குப் போய்விடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் மேக்கேதாட்டுத் திட்டத்தைக் கர்நாடக அரசு 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடிவமைத்துள்ளது.

கர்நாடக அரசின் இந்த சட்ட விரோதத் திட்டத்திற்குத் தடை கோரித் தமிழ்நாடு அரசு போட்ட வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் 2018இல் அளித்த தீர்ப்பின்படி அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடகம் – தமிழ்நாடு – கேரளம் – புதுவை ஆகிய நான்கு மாநிலங்களுக்குக் காவிரி நீரைப் பகிர்ந்தளிப்பதற்காக மட்டுமே அதிகாரம் கொண்டது.

இப்பொழுது காவிரி ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே. ஹல்தர், பணி ஓய்வுக்கு முன் இந்திய அரசின் நீராற்றல் ஆணையத்தின் தலைவராக இருந்தவர். அப்போது இவர், கர்நாடக அரசிடம் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைக் கேட்டுப் பெற்று, அதை ஏற்றுக் கொண்டு, காவிரி ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். பணி ஓய்வுக்குப் பின் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பதவியை ஹல்தருக்குப் பரிசளித்தது மோடி அரசு.

கடந்த காலங்களில் காவிரி ஆணையத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும், அதன் ஒப்புதலுக்காக மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை நிகழ்ச்சி நிரலில் வைத்து வந்தார். அப்பொழுதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியிலும், பின்னர் தி.மு.க. ஆட்சியிலும் தமிழ்நாடு சார்பாகக் கலந்து கொண்ட நீர்வளத்துறைச் செயலாளர்கள் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை நிகழ்ச்சி நிரலில் முன்வைத்தால் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்வோம் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். பின் வாங்கிக் கொண்டார் ஹல்தர்.

ஆனால், 01.02.2024 அன்று நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வழக்கம்போல் மேக்கோட்டு அணைகட்டும் திட்டத்தை நிகழ்ச்சி நிரலில் ஹல்தர் வைத்துள்ளார். வழக்கத்திற்கு மாறாக தமிழ்நாடு நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா கூட்டத்தில் கலந்து கொண்டு, மேக்கேதாட்டு அணை விவாதத்திற்கு வந்தபோது, எதிர்த்து வாக்களித்துள்ளார். அதேபோல் புதுவை மாநில அதிகாரியும் எதிர்த்து வாக்களித்துள்ளார்.

வாக்களிக்கும் உரிமை கொண்ட அதிகாரிகள் காவிரி ஆணையத்தில் மொத்தம் ஒன்பது பேர். இதில் 5 பேர் இந்திய அரசுத் துறைகளின் அதிகாரிகள். நான்கு மாநிலங்களுக்கும் தலைக்கு ஒருவர். தமிழ்நாடு + புதுவை மாநிலங்கள் நிரந்தரமாக இதில் சிறுபான்மை ஆகும். எனவே, அமோகப் பெரும்பான்மையுடன் மேக்கேதாட்டு தீர்மானம் நிறைவேறியுள்ளது.

இந்த உண்மை தெரிந்திருந்தும், நிகழ்ச்சியைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்யாமல் தமிழ்நாடு – புதுவை அதிகாரிகள் இந்தத் தடவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மர்மம் என்ன?

மேக்கேதாட்டு தீர்மானம் நிறைவேறியவுடன் ஹல்தர், அதை நீராற்றல் (ஜல்சக்தி) துறையின் கீழுள்ள நடுவண் நீர் ஆணையத்திற்கு அனுப்பி விட்டார்.

தி.மு.க. அரசு சார்பில் சென்ற அதிகாரி வழக்கத்திற்கு மாறாக ஆணையக் கூட்டத்தில் கலந்து கொண்டது துரோகம் என்று எதிர்க்கட்சித் தலைவர் – முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை கொடுத்தார். காவிரி உழவர்கள் சங்கத் தலைவர் திரு. பி.ஆர். பாண்டியன் அவர்களும் மற்றும் உழவர்களும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மேற்படி ஆணையைக் கூட்ட நடவடிக்கைக் குறிப்பு நகலை 05.02.2024 அன்று எரித்தார்கள்.

இத்தனைக்குப் பிறகும் காவிரி ஆணையத்தில் மேக்கேதாட்டு அணைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பற்றி தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாடு என்ன என்று விளக்கம் தராமல் இருப்பதன் மர்மம் என்ன?

மேக்கேதாட்டு அணைத் திட்டத்துடன் இணைத்து ரூ. 1,560 கோடி மதிப்பிலான தமிழ்நாட்டின் வெண்ணாற்றுப் பள்ளத்தாக்குப் பாசனச் சீரமைப்பின் இரண்டாம் நிலைப் பணிகளுக்கு ஏற்பிசைவு வழங்கும் திட்டத்தையும் முன்வைத்துள்ளார் ஹல்தர். தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் அந்தரங்கமாகப் பேசி, வெவ்வேறான இரு திட்டங்களையும் ஒன்றாக இணைத்தனவா? தமிழ்நாட்டு மக்களிடம் சமாதானம் கூறிக் கொள்ளலாம் என்று தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தந்திரம் வகுத்தனரா? தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை செயல்படுத்திட முனையும் இந்திய அரசை எதிர்த்துப் போராடி தமிழ்நாடு அரசு தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும்.

மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதி கொடுக்கக்கூடாது என்றும், வெளிப்படையாக அத்திட்டத்தை எதிர்த்து இந்திய அரசின் நீராற்றல் துறை அமைச்சர் அவர்கள் அறிக்கை கொடுக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்தும், இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் வரும் 16.02.2024 – வெள்ளி அன்று காலை 10 மணியளவில், தஞ்சையில் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தரின் கொடும்பாவியை எரிக்கும் போராட்டத்தை நடத்துவதென்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது!

இப்போராட்டத்தில், உழவர் பெருமக்களும், தமிழின உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமெனவும் காவிரி உரிமை மீட்புக் குழு அழைப்பு விடுக்கிறது!

நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-தஞ்சாவூர் பாலமுருகன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp