ராகுல்காந்தி எச்சரித்ததுபோலவே பணமதிப்பிழப்பு முதல் தேர்தல் பத்திரம் வரை! அப்படியே நடந்த 6 சம்பவங்கள்!

தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அதுகுறித்து ட்விட்டர் தளத்தில் ராகுல் காந்தியின் அப்போதைய பதிவு, நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது சில பழைய பதிவுகளையும் தேட ஆரம்பித்துள்ளனர்.

 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மத்திய பாஜக அரசுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை வைத்துவருபவர், காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதியும் எம்பியுமான ராகுல் காந்தி.
இன்று.. நேற்றல்ல.. ஐந்தாண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்கள் தவிர்த்து பணமதிப்பிழப்பு, கொரோனா வைரஸ், அதானி விவகாரம், இந்திய எல்லையில் சீனாவின் செயல்பாடு, பண்ணைச் சட்டங்கள், தேர்தல் பத்திரம் உள்ளிட்டவை குறித்து அன்றே விமர்சனங்களை வைத்தவர்.

உதாரணத்திற்கு, தேர்தல் பத்திரம் தொடர்பாக, கடந்த 2019ஆம் ஆண்டே கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்ட பதிவில், ’புதிய இந்தியாவில் லஞ்சம் மற்றும் சட்டவிரோத கமிஷன், தேர்தல் பத்திரம் என்று அழைக்கப்படுகின்றது’ எனத் தெரிவித்திருந்தார். இந்தப் பதிவு, நேற்று முன்தினம் தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் சில பழைய பதிவுகளைப் பலரும் தேட ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி, அசாமில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, “கறுப்புப் பணம் பதுக்கிய திருடர்கள், அந்தப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொள்வதற்கு பிரதமர் மோடி, வழிவகை செய்திருக்கிறார்” எனத் தெரிவித்திருந்தார். அவர் எச்சரித்து அடுத்த 8 மாதங்களில் அதாவது, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டுவந்தார். அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, ’நாட்டில் கறுப்புப் பணம், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்கவும், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவும் புழக்கத்தில் இருந்த ₹.1000 மற்றும் ₹.500 நோட்டுகள் செல்லாது’ என்று அறிவித்தார்.

ஆனால், கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த நடவடிக்கையில், பெருமுதலாளிகள் யாரும் சிக்கியதாக செய்திகள் வெளியாகவில்லை. மேலும் கோடிகோடியாக பணத்தைப் பதுக்கிவைத்தவர்கள் அரசுக்கு நெருக்கமான முக்கியப் புள்ளிகள் மூலம் மாற்றிக்கொண்டனர். அதேநேரத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்ட விதம் தவறானது எனப் பலரும் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதைத்தான் ராகுல் காந்தி முன்பே எச்சரித்திருந்தார்.

விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து எச்சரித்த ராகுல் காந்தி!
2018ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி, டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கிச் சென்ற விவசாய பேரணியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, ”வரும் (2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்) மக்களவைத் தேர்தலில் இரண்டு பிரச்னைகள் மட்டுமே எதிரொலிக்கும். ஒன்று விவசாயிகளின் எதிர்காலம். மற்றொன்று இளைஞர்களின் வேலைவாய்ப்பு” என எச்சரித்திருந்தார். அதன்படி, 2020ஆம் ஆண்டு, ஜூன் 5ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்திருந்த வேளாண் அவசரச் சட்டங்களுக்கு அதே ஆண்டு செப்.17ல், மக்களவை ஒப்புதல் வழங்கியது. அடுத்து, செப்.20ல் வேளாண் சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், 2021 நவ.19 அந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். விவசாயிகளின் போராட்டம் ஒரு வருடம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போதும் விவசாயிகள் ’டெல்லி சலோ’ போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நாட்டில் வேலைவாய்ப்பு பிரச்னை தலைவிரித்தாடுகிறது. அதிலும் வடமாநில இளைஞர்களின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. சமீபத்தில்கூட காசாவில் போர் தொடுத்துவரும் இஸ்ரேலுக்கு உயிரைப்பற்றிக் கவலைப்படாமல், வேலைக்குச் செல்வதற்கு வடமாநில இளைஞர்கள் களத்தில் குதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா குறித்து சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி!
2019ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவத் துவங்கிய போது அதுகுறித்து 2020 பிப்ரவரியில் எச்சரித்தவர், ராகுல் காந்தி. அப்போது, ’கொரோனா வைரஸைத் தடுக்க மத்திய அரசு மிகப்பெரிய, அசாத்தியமான நடவடிக்கை எடுத்தால்தான் கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்’ என எச்சரித்திருந்தார்.

மேலும் அவர், ’கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் போரில் முக்கியமான ஆயுதம் அதிகமான மக்களுக்குப் பரிசோதனை நடத்துவதுதான். ஆனால் இன்னும் பரிசோதனை விஷயத்தில் பின்தங்கியே இருக்கிறோம். கொரோனா வைரஸுக்குப் பின், மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவையும் இந்தியா எதிர்கொள்ளப் போகிறது. அதையும் சமாளிக்கும் வகையில் திட்டமிடல் அவசியம். ஏழைகளின் கைகளில் பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்’ என மத்திய அரசுக்குச் சுட்டிக்காட்டியிருந்தார்.

ராகுலின் இந்த விமர்சனம் குறித்து, அப்போது சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், ’ராகுல் காந்தி கூறிய பல விஷயங்கள் சரியாக இருந்து உள்ளன. சில அல்ல, அவரது பல கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. அவர் கொரோனா வைரஸ் அல்லது தடுப்பூசி குறித்து பேசியவை உண்மையாகி உள்ளன. அவரது வார்த்தைகளில் வலு உள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

சீன ஆக்கிரமிப்பு குறித்து எச்சரித்த ராகுல் காந்தி!
கடந்த 2020 மே, ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்கள் இந்திய எல்லையில் சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக ராகுல் தன்னுடைய எக்ஸ் தளத்தில் எச்சரித்தபடியே இருந்தார்.

இந்நிலையில்தான், கடந்த 2020 நவம்பர் மாதம் சிக்கிம் மாநிலம், டோக்லாமில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சீன ராணுவம் புதிதாக பதுங்குகுழிகளை அமைத்திருப்பது, செயற்கைக்கோள் புகைப்படம்மூலம் உறுதிசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியில் இருந்து 4.5 கி.மீ. தொலைவில் புதிய கிராமத்தை சீனா உருவாக்கி இருப்பதும், அந்தக் கிராமத்தில் 101 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பதும் செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சகம், “இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற உள்கட்டமைப்பு கட்டுமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்திய இறையாண்மை, நிலப்பகுதிகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன’’ எனத் தெரிவித்திருந்தது. அடுத்து, கடந்த 2022 மே மாதத்தில், கிழக்கு லடாக் பகுதியில் சீனா சார்பாக இரண்டாவதாக பாலம் ஒன்று பாங்காங் டுசோ ஏரியின் மீது கட்டப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை உறுதி செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதானியின் முதலீடு குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி!
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் ராகுல் காந்தி, ”மோடி அரசு துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிவாயு, சுரங்கங்கள், இந்தியாவின் பசுமை எரிசக்தி என அனைத்தையும் கெளதம் அதானிக்கு வழங்கிவிட்டது” எனத் தெரிவித்திருந்தார். மேலும், ’அதானி குழுமம் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ள பணம் பொதுத்துறை வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கடன்’ என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். தவிர, அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், ‘இது நரேந்திர மோடியின் அரசு கிடையாது; அம்பானி – அதானிகளின் அரசு’ எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ராகுல் காந்தியின் விமர்சனத்திற்குப் பின்னர், அதானி குழுமத்திற்கு எதிராக, ஹிண்டன்பர்க் எனும் அமெரிக்க நிறுவனம், கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனால் அதானி குழுமப் பங்குகள் கடுமையான வீழ்ச்சியடைந்தன. ஒரு மாதத்திலேயே அதானியின் சொத்து மதிப்பு 80 பில்லியன் டாலர்கள் சரிந்தது. அதானியின் சொத்து மதிப்பு 37.7 பில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கு குறைந்தது குறிப்பிடத்தக்கது. அதானி மீதான குற்றச்சாட்டு இந்திய அரசியலிலும் புயலைக் கிளப்பியது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தையே முடக்கின என்பது குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு மாநில வன்முறை குறித்து முன்பே எச்சரித்த ராகுல் காந்தி!
கடந்த 2022 ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, வடகிழக்கு மாநிலங்களில் வன்முறைகள் உருவாகும் என எச்சரித்தார். அதன்படி, கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் – மே மாதங்களில் மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கிடையே துவங்கிய வன்முறை, இன்றுவரை தொடர்ந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

– பாரூக்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp