கோவை, நீலாம்பூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 44). அந்தியூரை சேர்ந்த இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு மனைவியும் 15 வயதில் ஒரு மகனும் 9வயதில் மகளும் உள்ளனர்.
சதீஷ்குமார் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம் அருகில் சென்ற போது ரோட்டில் குறுக்கே ஒருவர் நடந்து சென்றார். எதிர்பாராத விதமாக அவர் மீது லேசாக மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலைத்திடுமாறிய சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி ரோட்டில் விழுந்தார்.
அப்போது எதிரே சரவணம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 32) என்பவருடைய மோட்டார் சைக்கிள் வந்தது. நிலைமையை உணர்வதற்குள் ரோட்டில் விழுந்து கிடந்த சதீஷ்குமார் தலைமீது கார்த்திக் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் சதீஷ்குமார் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய அவர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்தில் கார்த்திக்கும் கீழே விழுந்து காயம் அடைந்தார்.. அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோவை கிழக்கு போக்குவரத்து விபத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் காயமடைந்த நடந்து சென்ற பயணி அங்கிருந்து சென்று விட்டார்.
இது குறித்து அங்கு பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.