கோவில்பட்டி, ஜூன் 12: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பூர்ண கலை, ஸ்ரீ புஷ் கலை சமேத ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு விடிய விடிய உறுமி மேளத்துடன் சலங்கை ஒலியுடன் தேவராட்டம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 20க்கும் மேற்பட்ட தேவராட்டக் குழுவை சேர்ந்த 400 பேர் அய்யனார் கோவில் முன்பு தேவராட்டம் ஆடி ஸ்ரீ அய்யனார் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும்வென்றானுக்கும் எட்டயபுரத்துக்கும் இடையில் மஞ்சநாயக்கன்பட்டி, போடுபட்டி, எத்திலப்பநாயக்கன்பட்டி, ஜமீன் கோடாங்கிபட்டி, உள்ளிட்ட எட்டுப்பட்டி கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராம மக்களின் காவல் தெய்வமாக குல தெய்வமாக ஸ்ரீ பூர்ணகலை ஸ்ரீ புஷ் கலை சமேத ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் கம்பளத்து நாயக்கர் இன மக்கள் தங்களது பாரம்பரிய கலையான தேவராட்டத்தின் மூலம் குலதெய்வ வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இக்கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தங்களது பாரம்பரிய கிராமிய கலைகளில் ஒன்றான ஆண்கள் மட்டுமே பங்கேற்ற தேவராட்டம் உறுமி மேளத்துடன் சலங்கை ஒலியுடன் விடிய விடிய நடைபெற்றது.
அய்யனார் கோவில் முன்பு உறுமி மேள இசைக்கு ஏற்ப அடவுகளோடு (ஸ்டெப்) சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று காலில் சலங்கையும், தலையில் தலைப்பாகையும் கட்டி கைகளில் வண்ண துணிகளை வைத்து கொண்டு உற்சாகத்தோடு தேவராட்டம் ஆடி அய்யனார் சுவாமிக்கு காணிக்கையாக சமர்ப்பித்தனர். எட்டுப்பட்டி கிராம மக்களும் விடிய விடிய தேவராட்டத்தை கண்டு ரசித்தனர். ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா தர்மராஜ் சுவாமி செய்திருந்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் செய்தியாளர்,
-ந.பூங்கோதை.