எட்டயபுரம் புறவழிச்சாலையில் இருந்து விளாத்திகுளம் செல்லும் விலக்கில் கேட்டரிங் ஊழியர்கள் பயணித்த டூரிஸ்ட் வேன் மீது இருக்கன்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி பக்தர்கள் சென்ற மற்றொரு டூரிஸ்ட் வேன் எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கேட்டரிங் ஊழியர்கள் பயணித்த வேன் கவிழ்ந்தது. மேலும் இவ்விபத்தில் இரு வேன்களிலும் பயணித்த 30 பேர் காயமடைந்தனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த சமையல் மாஸ்டர்கள் 15 பேர் தூத்துக்குடியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சமையல் பணிகளை முடித்துவிட்டு விளாத்திகுளத்தில் இரவில் நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஒரு வேனில் புறப்பட்டு விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
நேற்று மாலை 6.30மணியளவில் எட்டயபுரம் புறவழிச்சாலையில் இருந்து விளாத்திகுளம் செல்லும் விலக்கில் வேன் திரும்பி உள்ளது. அப்போது எதிரே இருக்கன்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி பக்தர்கள் சென்று கொண்டிருந்த மற்றொரு டூரிஸ்ட் வேன் கட்டுப்பாட்டை இழந்து சமையல் மாஸ்டர்கள் பயணித்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சமையல் மாஸ்டர்கள் பயணித்த வேன் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் வெளியேறி வர முடியாமல் கதறி கூச்சலிட்டனர். தகவல் அறிந்த எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக சென்ற தீயணைப்பு துறையினர் கவிழ்ந்து கிடந்த வேனுக்குள் இருந்தவர்களை கண்ணாடிகளை உடைத்து பத்திரமாக மீட்டனர். விபத்தில் இரு வேன்களிலும் பயணித்த தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த டெய்சி ராணி (39 ), ராணி (40), வசந்தி (38), தெரசா (42), வீரபாகு (60), மூர்த்தி (56), வள்ளி (38), காளியம்மாள் (40), முத்துமாரி (35), பாண்டி (55), ஜெயலட்சுமி (38), அஞ்சலி (37) 12 பேர் பலத்த காயமடைந்தனர். 16 பேர் லேசான காயமடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பலத்த காயமடைந்த 14 பேர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு வரப்பட்டு சாலையில் கவிழ்ந்து கிடந்த வேனை தூக்கி அகற்றி போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இவ்விபத்து தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் செய்தியாளர்,
-ந.பூங்கோதை.