கோவை வடமதுரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்(35). தனியார் வங்கி மேலாளர். இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு சமீபத்தில் குறுந்தகவல் வந்தது. அதில், ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதில் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து கிருஷ்ணராஜ் தனது விவரங்களை பதிவு செய்தார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட மர்ம ஆசாமி ஒருவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய கிருஷ்ணராஜ் அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் பல கட்டங்களாக 48,57,115 ரூபாயை அனுப்பினார்.
ஆனால் அவருக்கு லாப தொகை கிடைக்கவில்லை. முதலீட்டு தொகையையும் திரும்ப பெற்ற முடியவில்லை. அந்த நபரை தொடர்பு கொண்டு கேட்டபோது, மீண்டும் பணம் அனுப்பினால் மட்டுமே, நீங்கள் செலுத்திய தொகையை, லாபத்துடன் உங்களது வங்கி கணக்கில் வரவு வைக்க முடியும் என தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மொத்தமாக 48,57,115 ரூபாயை மோசடி செய்து விட்டனர்.
இதனால் ஏமாற்றமடைந்த கிருஷ்ணராஜ் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.