நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தல் – 2024-க்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், அனைத்து பகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பணிக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தலைமையில், வாக்கு எண்ணிக்கை பணிகள் குறித்து வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் விளாத்திகுளம் மற்றும் எட்டையபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தைச் சேர்ந்த துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி முகாமில், மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பணிகள் குறித்து வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் விளக்கிக் கூறினார். மேலும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு கூட்டத்தின் முடிவில் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
-ந.பூங்கோதை, விளாத்திகுளம்.