கோவை ஒண்டிப்புதூரில் தாய் மற்றும் இரண்டு மகள்கள் நேற்று தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்த சம்பவத்தில் தந்தையே இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருப்பது தெரியவந்துள்ளது.
கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலணியை அடுத்த எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி புஷ்பா (வயது 35). வீட்டு வேலைக்குச் சென்று வந்தார்.
இவர்களுக்கு ஹரிணி (வயது9), மற்றும் ஷிவானி (வயது3) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் தங்கராஜ் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்ததால், கணவன் மனைவி இடையே தினமும் வாக்குவாதம், சண்டைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று காலை தங்கராஜ் அக்கம்பக்கத்தினரை அழைத்து தனது மனைவி மற்றும் குழந்தைகள் தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பதாகவும், ஒரு குழந்தையை மீட்ட நிலையில் இன்னொரு குழந்தை மற்றும் தனது மனைவியை மேலே எடுப்பதற்கு உதவி செய்யுமாறு கூச்சலிட்டுள்ளார்.
தங்கராஜ் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மூன்று பேரின் உடல்களையும் மீட்டு இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், தங்கராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மனைவி மற்றும் மகள்கள் எப்படி தொட்டியில் விழுந்தனர் என்பது தெரியாது என்று மழுப்பியுள்ளார். விசாரணையின் போது முன்னுக்குப்பின் முரணான தகவலைக் கூறவே போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, குடிப்பதற்குப் பணம் கேட்டு மனைவி புஷ்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அது சண்டையாக மாறியதும், அப்போது தங்கராஜ் கோபத்தில் மூத்த மகள் ஹரிணியை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி விட்டதும் தெரியவந்தது.
ஹரிணியை மீட்பதற்கு புஷ்பா தண்ணீர் தொட்டிக்குள் குதித்த நிலையில், தங்கராஜ் தனது இளைய மகளான ஷிவானியையும் தொட்டிக்குள் வீசி, தொட்டியை மூடிய அதிர்ச்சிகர உண்மையும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
தங்கராஜ் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் தங்கராஜைக் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளச்சாராய மரணங்களின் ஓலம் இன்னும் ஓயாத நிலையில், குடிப்பழக்கத்திற்காக மனைவி, மகள்களை கொலை செய்த கொடூர தந்தை குறித்த செய்தி கோவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.