கோவை பெரியகடை வீதி வழியாகச் செல்லும் பொதுமக்களை அழைக்க ஆட்களை நியமிக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
கோவை பெரியகடை வீதியில் துணி நகைக்கடை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இங்கு தினமும் கோவை மட்டுமல்லாது திருப்பூர், நீலகிரி போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பொருட்களை வாங்க நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் பொதுமக்களை தங்கள் கடைக்கு அழைத்து, பொருட்களை விற்பனை செய்கின்றனர் வியாபாரிகள்.
சிறு குறு வியாபாரிகள் நெடுநாட்களாக இந்த யுத்தியைப் பயன்படுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால், சமீப நாட்களாக வியாபாரிகள் நியமிக்கும் சில குறிப்பிட்ட நபர்கள் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், பொருட்கள் வாங்க வரும் பெண்களை ஒரு ஊழியர் கட்டாயப்படுத்தி அழைத்து, இதனால் தகராறு ஏற்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலனாது.
பெரியகடை வீதியில் பொதுமக்கள் சுதந்திரமாக தங்களுக்கு பிடித்த கடையில் சென்று பொருட்கள் வாங்க இடையூறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
இந்த சூழலில், பெரியகடை வீதி போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிப்புப் பலகைகளை வைத்துள்ளனர். அதில், வாடிக்கையாளர்களை அழைக்கக் கூலி ஆட்களை நியமிக்கக் கூடாது. அப்படி அழைக்கும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அத்தகையை நபர்களை நியமிக்கும் கடை உரிமையாளர்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவார்கள் என்றும் அறிவிப்புப் பலகையை வைத்துள்ளனர்.
இது பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி. ராஜேந்திரன்.