கோவையில் தண்ணீர் தொட்டியை மூடி மனைவி, 2 மகள்களை கொன்ற தொழிலாளி சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (40). கூலி தொழிலாளி. இவர் மனைவி புஷ்பா (36). வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஹரிணி (9), ஷிவானி (3) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். ஹரிணி மாநகராட்சி பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். ஷிவானி பால்வாடிக்கு சென்று வந்தார்.
தங்கராஜ் மது, கஞ்சா போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். இவர் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 7ம் தேதி மாலை மது போதையில் தங்கராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் இரவு அவருக்கும், மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த தங்கராஜ் ஹரிணியை தாக்கி 8 அடி ஆழமுள்ள தண்ணீர் நிரம்பிய தரைமட்ட தொட்டியில் போட்டுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த புஷ்பா நீரில் மூழ்கிய மகளை காப்பாற்ற தொட்டிக்குள் குதித்தார். அப்போது தொட்டியின் அருகே நின்ற தங்கராஜ், 2வது மகள் ஷிவானியையும் தொட்டிக்குள் தூக்கி போட்டார்.
பின்னர் அவர்கள் வெளியே வராமல் தடுக்க தொட்டியை மூடியதாக தெரிகிறது. பின்னர் அவர் தூங்கி விட்டார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த தங்கராஜ், மனைவி, 2 மகள்கள் நீரில் மூழ்கி இறந்து கிடந்ததை பார்த்து புலம்பி அழுதார். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போதையில் இருந்த தங்கராஜ் மாற்றி மாற்றி தகவல் கூறியதால் முதலில் போலீசாரால் சரியாக விசாரிக்க முடியவில்லை.
பின்னர் சம்பவம் நடந்த இடத்திற்கு தங்கராஜை அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது 3 பேரையும் கொன்றதை தங்கராஜ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட தங்கராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் போலீசார் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட 3 பேரின் சடலங்கள் இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் சிங்காநல்லூர் பகுதி சுடுகாட்டில் அடுத்தடுத்த இடத்தில் அடக்கம் செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.