தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சுமங்கலி பூஜைக்கு உகந்த தினமாக கருதப்படும் வரலட்சுமி நோன்பு தினமான இன்று “விஷேச சுமங்கலி பூஜை”வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் விளாத்திகுளம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதை முன்னிட்டு இன்று கோவில் நிர்வாகம் சார்பில், சுமங்கலி பூஜைக்கு வந்திருந்த பெண்கள் அனைவருக்கும் பூஜைக்கு தேவையான சந்தானம், குங்குமம், மலர்கள், தேங்காய், மஞ்சள், அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
பின்னர் அனைவரும் கோவில் வளாகத்தில் வரிசையாக அமர்ந்து சுமங்கலி பூஜை செய்து தீபாராதனை காட்டி சகல தோஷங்களும் நீங்கி இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவ வேண்டி வழிபட்டனர்.
அதுமட்டுமன்றி, இந்த சுமங்கலி பூஜையில் திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்றும், திருமணமான புதுமண பெண்கள் குழந்தை பேறு உண்டாக வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டும், நன்றாக மழை பொழிய வேண்டும் உள்ளிட்ட ஐதீகங்களை மனதில் கொண்டு சுமங்கலி பூஜை சிறப்பாக செய்து முடித்தனர்.
பின்னர் இறுதியாக கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.