சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊராட்சிச் செயலர்கள்! விசாரணை நடத்தவும், பணியிட மாற்றம் செய்யவும் பொதுமக்கள் கோரிக்கை!
கிராம ஊராட்சியின் முழுநேரப் பணியாளராகவும், பொதுமக்களுக்கு உதவி புரியக்கூடிய நிர்வாகப் பணியாளராகவும் ஒவ்வொரு ஊராட்சியிலும், கிராம ஊராட்சிச் செயலாளர் ஒருவர் பதவி வகித்து வருகிறார். அரசின் ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கும் ஊராட்சி மக்களுக்கும் அடித்தளமாகவும், பாலமாகவும் கிராம ஊராட்சிச் செயலாளர் இருப்பார்.
மற்ற அரசு ஊழியர்களைப் போலவே, ஊராட்சிச் செயலாளர்களும் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றக்கூடாது என்பது விதி. ஆனால் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் அணைக்கரைப்பட்டி (வடிவேலன் – 19 வருடம்), செல்லியம்பட்டி (மல்லிகா 25 – வருடம்), அ.காளாப்பூர் (ரமேஷ் – 25 வருடம்), கோழிக்குடிப்பட்டி (விமலா 16 – வருடம்), மல்லா கோட்டை (ருக்குமணி – 25 வருடம்), எஸ்.மாம்பட்டி (முத்துமீனா – 14 வருடம்),
முறையூர் (அமராவதி – 13 வருடம்), எஸ்.எஸ்.கோட்டை (ராதா – 21 வருடம்). எஸ்.வையாபுரிப்பட்டி (மதிவாணன் – 23 வருடம்) ஆகிய 9 ஊராட்சிகளில் விதிகளை மீறி ஊராட்சி செயலர்கள் குறைந்தபட்சம் 13 ஆண்டுகளிலிருந்து அதிகபட்சம் 25 ஆண்டுகளாக அதே ஊராட்சியில் பணிபுரிந்து வருவதை, சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அம்பலப்படுத்தியுள்ளார்.
பொதுவாக ஊராட்சிச் செயலாளர்கள் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஒரே ஊராட்சியில் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் பட்சத்தில், அவர்களுக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இடையே ஏற்படும் விருப்பு வெறுப்புகளால் நிர்வாக ரீதியிலான பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மேலும், சில ஊராட்சிச் செயலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊர்களிலேயே தொடர்ந்து நீண்ட காலமாகப் பணிபுரிவதால் அவர்களது உறவினர்களின் ஆதிக்கம் மற்றும் அரசியல் நிலைப்பாடு போன்ற காரணங்களால் அரசின் பல்வேறு திட்டங்களில் ஊழல், முறைகேடு நிகழவும் ஊராட்சி நிர்வாகத்தில் குழப்பம், குந்தகம் எற்படவும் காரணமாகின்றன.
பல்வேறு ஊராட்சிச் செயலர்கள் ஊராட்சித் தலைவர்களின் கையெழுத்து இல்லாத போலி ரசீதுகளைத் தந்து பொதுமக்களிடம் வரிவசூல் செய்வதாகவும், முறைகேடாக குடிநீர் இணைப்புகள் வழங்குவதாகவும், புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவதில் விதிகளை மீறி முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், நீண்ட காலமாக ஒரே ஊராட்சியில் பணிபுரிந்து வருவதால் மேலதிகாரிகளின் துணையோடு பல்வேறு திட்டங்களில் ஊழல் செய்து ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஒரே ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சிச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்தும், அவர்கள் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் குறித்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டுமென்றும், நீண்ட காலமாக ஒரே ஊரில் பணிபுரிந்து வரும் ஊராட்சிச் செயலாளர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.