விளாத்திகுளம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கள ஆய்வு மேற்கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-11-2023 அன்று அறிவித்து 31.01.2024 அன்று தொடங்கி வைத்தார்கள்.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம், மாவட்டத்தில் குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், குறிப்பிட்ட வட்டத்தில் காலை 9.00 மணி முதல், மறுநாள் காலை 9.00 மணி வரை அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள்.
கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள், மேம்பட்ட சேவைகள் வழங்குதல் / திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும், இன்றைய தினம், மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக, இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் , துறை அலுவலர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து, எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தொடங்கப்பட்ட ‘உங்களைத் தேடிஉங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், இன்று (18.12.2024) விளாத்திகுளம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கள ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, விளாத்திகுளம் வட்டத்திற்குட்பட்ட மேல்மாந்தை ஊராட்சி இ.வேலாயுதபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.9.77 இலசம் செலவில் கட்டப்பட்டுவரும் நியாயவிலைக் கட்டட கட்டுமானப்பணிகளையும், சூரங்குடி ஊராட்சி சூரங்குடியில் 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.37.60 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தினையும், கிராமப்புறங்களில் அனைவருக்கும் வீடு என்ற கணக்கெடுப்பின் வழியாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் பொருட்டு சூரங்குடியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளி சோலையம்மாள் என்பவருக்கு ரூ.3.50 இலட்சம் செலவில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவு வழங்கப்பட்டு நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகளையும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக மேல்மாந்தை ஊராட்சி பகுதிகளில் சேதமடைந்த விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, விவசாயிகளிடம் பாதிக்கப்பட்ட விளைநிலங்களின் விவரங்கள் குறித்தும், தங்களது பகுதியில் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றதா எனவும் கேட்டறிந்து, விளைநிலங்கள் பாதிக்கப்பட்ட எந்தவொரு விவசாயியும் விடுபட்டுவிடக்கூடாது என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சூரங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, கணக்கு வைத்திருப்பவர்களின் விபரங்கள் குறித்தும், இந்த ஆண்டுக்கான கடன் இலக்கு குறித்தும், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் விபரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, சூரங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தின் நியாய விலைக்கடையில் ஆய்வு செய்து குடும்பஅட்டைகளின் எண்ணிக்கைகள், அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக காலாங்கரை கால்வாயில் ஏற்பட்ட உடைப்பினால் சூரங்குடி பகுதிகளில் சேதமடைந்த கம்பு, மிளகாய், மல்லி, உளுந்து உள்ளிட்ட விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, விவசாயிகளிடம் பாதிக்கப்பட்ட விளைநிலங்களின் விவரங்கள் குறித்தும், தங்களது பகுதியில் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றதா எனவும் கேட்டறிந்து, விளைநிலங்கள் பாதிக்கப்பட்ட எந்தவொரு விவசாயியும் விடுபட்டுவிடக்கூடாது என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து, காலாங்கரை கால்வாயில் ஏற்பட்ட உடைப்பினை நேரில் பார்வையிட்டு சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அரியநாயகிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, மதிய உணவுத்திட்டத்தின்கீழ் மாணவ – மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுகள் சமைக்கப்படும் சமையலறையினை ஆய்வு செய்து, மாணவ – மாணவியர்களுடன் கலந்துரையாடினார். மேலும், மாணாக்கர்களிடையே கற்றல் திறனையும், வாசிப்புத் திறனையும் மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், இராமச்சந்திராபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.22 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும், காடல்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ.29.70 இலட்சம் செலவில் கட்டப்பட்டுவரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, இராமச்சந்திராபுரத்தில் உள்ள நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைகள், அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் அதன் தரம் குறித்து ஆய்வு செய்து, இராமச்சந்திராபுரம் ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மைப்பணியாளர்களிடம் கலந்துரையாடி, தூய்மைப்பணிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தங்களுக்குரிய ஊதியம் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.
மேலும், வைப்பாறு வடிநிலக்கோட்டத்திற்குட்பட்ட ஆத்தங்கரை அணைக்கட்டினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக ஆற்றங்கரையோரம் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, இனிவரும் காலங்களில் விளைநிலங்கள் பாதிக்காதவாறு நிரந்தர தடுப்பு பணிகள் அமைப்பதற்கு திட்ட அறிக்கை ஒன்றினை தயார் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் , பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கனிவுடன் கேட்டறிந்தார்கள். பின்னர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.28,500 மானியத்தில் பேட்டரி தெளிப்பான்கள், தார்ப்பாய்களையும், ஆவின் நிர்வாகம் சார்பில் பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த பால் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க செயலாளர்கள் மற்றும் தொகுப்பு பால் குளிரூட்டும் மைய செயலாளர்களுக்கு ரொக்கப் பரிசுத் தொகையாக முதல் பரிசு ரூ.10,000மும், இரண்டாம் பரிசு ரூ.5,000மும், மூன்றாம் பரிசு ரூ.3000 என மொத்தம் 8 நபர்களுக்கு ரூ.46,000 ரொக்கப் பரிசுத் தொகையாக வழங்கினார்.
தொடர்ந்து, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், அனைத்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் முற்பகலில் மேற்கொண்ட களப்பயணங்கள், அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதி செய்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி, விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மல்லிகா (மேல்மாந்தை), வேல்த்தாய் (சூரங்குடி) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.