கோவையில் 11 லட்சம் ரூபாய்க்கான அடமானக்கடனுக்காக 2.5 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்கும் திமுக வை சேர்ந்த நபர்களிடமிருந்து தனது சொத்தை மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்ட பெண் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை தென்னமநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி. இவருக்கு கோவை சாய்பாபா காலனி பகுதியில் சுமார் ஐந்தரை செண்ட் பரப்பளவில் வீடு ஒன்று உள்ளது.
சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான அந்த வீட்டின் பேரில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சைன்ரைஸ் சுரேஷ் என்பவர் மூலமாக கடந்த 2020ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த ஆடிட்டர் மாணிக்கம் என்பவரிடம் 11 லட்சம் ரூபாயை அடமானம் வைத்து கடனாக பெற்றுள்ளார்.
பின்னர் மூன்று மாதம் கழித்து அதனை வட்டியுடன் திருப்பி செலுத்த திலகவதி சென்றபோது 11 லட்சத்துக்கு பதில் 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் சொத்து பத்திரங்களை திருப்பி தருவதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த திலகவதி தான் பெற்ற தொகையை வட்டியுடன் தந்து விடுவதாகவும் தனது சொத்து பத்திரங்களை திருப்பித் தரும்படியும் கேட்டுள்ளார்.
ஆனால் சன்ரைஸ் சுரேஷ் மற்றும் ஆடிட்டர் மாணிக்கம் ஆகியோர் திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்களான மகுடபதி மற்றும் சிவகுமார் ஆகியோருடன் இணைந்து திலகவதியை மிரட்டி 50 லட்சம் ரூபாய் தந்தால் மட்டுமே வீட்டை தருவேன் என கூறி வீட்டை பூட்டி தங்கள் வசப்படுத்தியுள்ளனர்.
மேலும் இந்து தொடர்பாக தங்களை ஒன்றும் செய்ய இயலாது என்றும் ஆளும்கட்சி என்பதால் காவல்துறையில் புகார் அளித்தாலும் எவ்வித நடவடிக்கையும் இருக்காது என்றும் அவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட திலகவதி கோவை சாயிபாபாகாலனி காவல்நிலையத்தில் கடந்த 17 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மனு ரசீது அளித்துள்ள காவல்துறையினர் அதனை தொடர்ந்து எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்காததால் உரிய நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் தனது சொத்தை மீட்டுத்தருமாறு திலகவதி இன்று கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் தனது உறவினர்களுடன் வந்து புகார் அளித்தார்.
அப்போது தனது வீட்டை அபகரித்துள்ள திமுக பிரமுகர்கள் அந்த வீட்டில் இளம்பெண்களை வைத்து தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் தட்டி கேட்டால் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும் காவல்துறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தனது வீட்டை மீட்டு தரும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக பிமுகர்கள் மீது சொத்து அபகரிப்பு குறித்த பெண்ணின் புகார் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.