
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மருதிபட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்பவரது மகன் ஆகாஷ் (வயது19). இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர். ஆகாஷ், நேற்று மாலை மருதிபட்டியிலிருந்து திருப்பத்தூர் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அதே நேரம் காரைக்குடியிலிருந்து திண்டுக்கல்லை நோக்கி ஒரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது.

ஆகாஷ், M.கோவில்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே திடீரென ஒரு கன்றுக்குட்டி வந்துள்ளது. எதிர்பாராதவிதமாக கன்றுக்குட்டியின் மீது மோதிய ஆகாஷ், அப்போது எதிர்ப்புறத்தில் வந்த தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கினார். இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் அடிபட்ட கன்றுக்குட்டியும் இறந்துள்ளது.

இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி, பிணக்கூறாய்வுக்காக சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.வி.மங்கலம் காவல் சார்பு ஆய்வாளர் பீட்டர் அலங்கார தம்புராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.











